லண்டன், பெல்ஜியத்தில் இருந்து மூலப்பொருட்கள் வரவைக்கப்படுகிறது!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஐஸ்கிரீம் என்றால் பிடிக்கும்தான். ஆனால், அதைச் சாப்பிட நினைக்கும்போதே உடல்நிலையைப் பற்றிய அக்கறையும் சேர்ந்தே வரும். ஐஸ்கிரீம் சாப்பிட்டால் காய்ச்சல் வருமோ, இருமல் வருமோ என்ற அச்சமும் இருக்கும். ஆனால், தரமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிற ஐஸ்கிரீம்களை சாப்பிடும்போது உடல்நிலை சார்ந்து யோசிப்பதை தவிர்க்கலாம். ஆமாம், சுத்தமான பிரீமியம் பிராடக்ட்ஸ் கொண்டு தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்கள் சாதாரண ஐஸ்கிரீம்களைப்போல் இல்லாமல் உடலுக்கு எந்த மாதிரியான தொல்லையும் தராமல் அதே நேரத்தில் சுவையாகவும் இருக்கும். அப்படிப்பட்ட முதல் தர ஐஸ்கிரீம்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பது மட்டுமில்லாமல் அந்த ஐஸ்கிரீம்களை பலவகையான ஃப்ளேவர்களில் கொடுத்து வருகிறது சீத்தாமாள் காலணி ஆழ்வார்பேட்டையில் இருக்கிற ‘விப்பிஸ்’ என்கிற ஐஸ்கிரீம் கஃபே. பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். கல்லூரி படிப்புகூட சென்னையில்தான்.
கல்லூரி முடித்தபிறகு சொந்தமாக பிஸ்னஸ்தான் செய்து வந்தேன். என்னதான் சொந்தமான தொழில் இருந்தாலும் உணவகம் வைத்து அதன் அனுபவத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்பது எனது ஆசை. அதனாலே, ஃபுட் பிஸ்னஸ் செய்யலாமென இந்த உணவுத்துறைக்கு வந்தேன் என பேசத் தொடங்கினார் உணவகத்தின் உரிமையாளர் தர்ஷன். எடுத்தவுடனே எல்லாத்திலும் வெற்றிபெற முடியாது. எந்தத் தொழிலிலுமே ஒரு அனுபவம் வேண்டும் என்பதால் ஆரம்பத்தில் நுங்கம்பாக்கத்தில் ஒரு உணவகம் வைத்து நடத்தி வந்தேன். அங்கிருந்துதான் உணவுத்தொழிலில் என்னவெல்லாம் செய்ய வேண்டும், எப்படிப்பட்ட உணவுகளை மக்களுக்கு கொடுக்கவேண்டும் எனக் கற்றுக்கொண்டேன். அதன்பிறகு, அந்த உணவகத்தை நடத்த முடியவில்லை. சிறிது இடைவெளிக்குப் பிறகு இப்போது இந்த விப்பிஸ் என்கிற ஐஸ்கிரீம் கஃபேயை தொடங்கி இருக்கிறேன். இந்த கஃபேயைப் பொருத்தவரையில் பிரீமியமான ஐஸ்கிரீமை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கம் மட்டும்தான் இருந்தது. ஏனெனில், சென்னையில் பல இடங்களில் ஐஸ்கிரீம் கிடைக்கிறது. பெரிய பெரிய கடைகளில் இருந்து ரோட்டுக் கடைகள்வரை அனைத்து இடங்களிலும் ஐஸ்கிரீம் கிடைக்கும்.
பத்து ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய் வரை அனைத்து விலையிலும் விலைக்குத் தகுந்தபடி ஐஸ்கிரீமின் தரம் இருக்கும். ஆனால், அப்படிப்பட்ட எல்லா வகையான ஐஸ்கிரீமிஸுமே மில்க் பவுடர் கொண்டு தயாரிக்கப்பட்டதாக இருக்கும். சில இடங்களில் நல்ல ஐஸ்கிரீம் கிடைத்தாலும் விலை அதிகமாக இருக்கும். இந்த இரண்டையும் கருத்தில் கொண்டு சரியான விலைக்கு தரமான ஆரோக்கியமான ஐஸ்கிரீம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டதுதான் இந்த ஐஸ்கிரீம் கஃபே. லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் கிடைக்கும் ஐஸ்கிரீமை சென்னையில் சுவைத்துப் பார்க்க வேண்டுமென்றால் நம்ம கஃபே அதற்கு சரியான இடம். ஏனெனில், இங்கு தயாரிக்கப்படுகிற எல்லா வகையான ஐஸ்கிரீமுமே தரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. ஏனெனில், இந்த கஃபே தொடங்கவேண்டும் என்று முடிவெடுத்தவுடனையே ஐஸ்கிரீம் சார்ந்து பல இடங்களில் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன். எங்கு சரியான ஐஸ்கிரீம் தயாராகிறது என்பது தொடங்கி ஐஸ்கிரீமில் என்ன மாதிரியெல்லாம் வெரைட்டியை தயாரிக்க முடியும் என்பது வரை அனைத்தையும் தெரிந்து கொண்டேன். ஐஸ்கிரீம் என்றாலே கோன் ஐஸ்கிரீம் அனைத்து தரப்பினருக்குமே பிடிக்கும். எங்கள் கஃபேயில் இருக்கிற கோனை நாங்களே தயாரிகிக்றோம். அதுவும் அனைவருக்கும் பிடித்தமாதிரி சாக்கோ, ஸ்ட்ராபெரி, பிளைன் கோன், ஸ்பெஷல் கோன் என பல வண்ணங்களில் தயாரிக்கிறோம்.
குளிர்ச்சியாக ஏதோ ஒன்றைக் கொடுத்தாலும்கூட ஐஸ்கிரீம் என நம்பிவிடும் வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் எனது கடை ஐஸ்கிரீம் மட்டும் தனியாக தெரிய வேண்டுமென நினைத்தேன். அதனால் முதல்தர பொருட்களைக் கொண்டு ஐஸ்கிரீம் தயாரிக்க ஆரம்பித்தேன். ஐஸ்கிரீமிற்கு தேவையான முதன்மையான பொருட்களை இத்தாலியில் இருந்து வரவைக்கிறேன். அதேபோல, பெல்ஜியத்தில் இருந்து சாக்லேட்டுகள் வரவைக்கப்பட்டு அதிலும் பல வெரைட்டிகள் தயாராகிறது.நமது கஃபேயில் காட்டன் கேண்டி கிளவுடு ஐஸ்கிரீம் ரொம்ப ஃபேமஸ். அதாவது நாங்கள் ஸ்பெஷலாக தயாரித்த கோனில் ஐஸ்கிரீம் வைத்து கொடுப்போம். அந்த கோனை சுற்றி குழந்தைகளுக்குப் பிடித்த பஞ்சு மிட்டாயை ரோல் செய்து பார்ப்பதற்கு அழகாக இருக்கும்படி கொடுப்போம். பார்ப்பதற்கு அழகாகவும் சுவையில் புதிதாக இருக்கும் இந்த ஐஸ்கிரீமை குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்த ஐஸ்கிரீம் லண்டனில் ஃபேமஷான ஐஸ்கிரீம். அதை சென்னை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அதை எனது கஃபேயில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். ஐஸ்கிரீமைப் போலவே வேஃபிள்ஸ், குக்கீஸ், பிரவ்னி, கேக்ஸ், மஃவின்ஸ், சான்ட்விச் போன்றவற்றில் பலவகையான வெரைட்டிகள் இருக்கிறது. அரேபியன் டெசர்ட்ஸ் இருக்கிறது.
அரபு நாடுகளில் ரொம்பவும் ஃபேமஷான பக்லவா கேக் இங்கு கிடைக்கிறது. கிளாசிக், சாக்கோ ஓவர்லோட், நட்டல்லா, பெர்ரி ப்ளாஸ்ட் போன்ற வெரைட்டியில் வேஃபிள்ஸ் இருக்கிறது. இந்த மாதிரியான வேஃபிள்ஸ் சென்னையில் இப்போதுதான் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதையுமே இங்கு கொடுத்து வருகிறோம். அதேபோல, பிரவ்னியில் ப்ரோனட், சாக்கோ சங் பிரவ்னி, வால்நட் பிரவ்னி என ட்ரெண்டிங்கில் இருக்கக்கூடிய கேக்குகள் இங்கு கிடைக்கிறது. கேக்ஸில் ப்ளூபெர்ரி, லோட்டச் பிஸ்கோவ் சீஸ் கேக், பக்லவா சீஸ் கேக், பேசன் ஃப்ரூட் கேக் என வித்தியாசமான கேக்குகள் பல இருக்கிறது. அதைப்போல, ஒவ்வொரு சீசனிலும் என்ன மாதிரியான ஃப்ரூட் ஃேபமஸ் ஆகுமோ அந்த ஃப்ரூட்டில் அனைத்து வகையான கேக் அண்ட் ஐஸ்கிரீம் நமது கடையில் கிடைக்கும். இப்போது மாம்பழம் சீசன் என்பதால் மாம்பழத்தில் அனைத்து வகையான கேக்குகள் மற்றும் பலூடாக்கள் கிடைக்கிறது. மேங்கோ சாக்கோ கேக், மேங்கோ ஃபலூடா, மேங்கோ பெரி கேக் என இன்னும் பல விதமான கேக்குகள் இருக்கிறது. சென்னையில் நமது கடையில் கிடைக்கும் அனைத்துமே அடிக்கடி ட்ரெண்டிங் ஆகும் உணவுகள்தான். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவுகள் பல இருக்கிறது. கேக் மேக்கர்ஸ், ஐஸ்கிரீம் மேக்கர்ஸ் என அனைத்திலும் அனுபவம் வாய்ந்தவர்கள்தான் நமது கஃபேயில் இருக்கிறார்கள். இந்த கஃபேயின் மேனேஜர் சாம்ராஜ், அவரும் கஃபேயில் வளர்ச்சிக்காக உதவுகிறார். அந்த வகையில் அனைவரும் விரும்பக்கூடிய இடமாக விப்பிஸ் இருக்கிறது என பேசி முடித்தார் தர்ஷன்.
– ச.விவேக்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்.