பெங்களூரு: கர்நாடக முதல்வராக குமாரசாமி இருந்த போது குவாரி நிறுவனத்துக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை விசாரித்த லோக்ஆயுக்தா 2017ம் ஆண்டு சுரங்க முறைகேடு வழக்கில், குமாரசாமி மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநரிடம் 2023ம் ஆண்டு அனுமதி கோரியிருந்தனர். ஆனால் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் இதுவரை அனுமதியளிக்கவில்லை. தற்போது, முதல்வர் சித்தராமையா மீதான மூடா மாற்று நில முறைகேடு விவகாரத்தில் புகார் கிடைத்த அன்றைய தினமே அவருக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியதுடன், அவர் மீது வழக்குப்பதிய அனுமதியும் வழங்கினார்.
இது சர்ச்சையை கிளப்பவே, முன்னாள் குமாரசாமி மீதான முறைகேடு வழக்கை விசாரித்துவரும் லோக்ஆயுக்தா போலீசார், அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்குமாறு கடந்த திங்கட்கிழமை மீண்டும் அனுமதி கேட்டுள்ளனர். இதுதொடர்பாக ஒன்றிய அமைச்சர் குமாரசாமி நேற்று பெங்களூருவில் மஜத கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘என்னை சிக்கவைப்பதற்கு பல முயற்சிகள் நடக்கின்றன. என் மீதான குற்றச்சாட்டுகளை நானே எதிர்கொள்வேன்.
தேவைப்பட்டால் கண்டிப்பாக நான் ஒன்றிய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன். நான் முதல்வராக இருந்தபோது எனக்கு எதிரான வழக்குகளை பதவியை பயன்படுத்தி முடித்திருக்க முடியும். இந்த வழக்கை விசாரித்துவரும் எஸ்.ஐ.டி, இத்தனை ஆண்டுகளாக ஏன் அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை?’ என்றார். குமாரசாமி மீதான புகார் குறித்து முதல்வர் சித்தராமையா கூறும்போது, ‘ஸ்ரீசாய் வெங்கடேஷ்வர மினரல்ஸ் (எஸ்எஸ்விஎம்) குவாரி நிறுவனத்திற்கு இரும்பு தாது வெட்டி எடுக்க 550 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்த புகாரில் ஒன்றிய அமைச்சர் குமாரசாமியை நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்வது உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்’ என்றார்.