மதுராந்தகம்: நெற்குணம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெற்குணம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர், ஊராட்சி நிர்வாகத்தில் தொகுப்பு வீடு வழங்குதல் மற்றும் முருங்கை நாற்றங்கால் வேலி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செய்வதில் முறைகேடு செய்துள்ளதாக கூறி கிராம மக்கள் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடந்த மாதம் மனு அளித்தனர்.
அதன் அடிப்படையில், நேற்று ஊராட்சி மன்ற தலைவர் மீது விசாரணை நடைபெறும் என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சித்தாமூர் பிடிஓ விசாரணைக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பகுதி மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் தொழுப்பேடு – சூனாம்பேடு சாலையில் 200க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அச்சிறுப்பாக்கம் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.