இஸ்லாமாபாத்: கருவூல ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் எம்.பி. பதிவியை இம்ரான்கான் இழக்கிறார். மேலும், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் இம்ரான்கான் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது பதவியை தவறாக பயன்படுத்தி ரூ.14 கோடி ஊழல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கானிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இன்று நடைபெற்ற விசாரணையில், குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதால், இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. ரூ.1 லட்சத்தை கட்டத்தவறினால், மேலும் 6 மாதங்களுக்கு கூடுதலாக சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. பின்னர் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாகிஸ்தானில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இம்ரான்கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.