ஊத்துக்கோட்டை: தாமரைப்பாக்கம் அருகே 6 வழிச்சாலை பணியின்போது மின் விளக்கிற்காக பயன்படுத்தி வந்த காப்பர் வயர்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரையிலான 6 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது.
இதில் இரவு நேரத்தில் ஜெனரேட்டர் உதவியுடன் மின்விளக்கு வெளிச்சத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே ஜெனரேட்டர் பகுதியில் இருந்து மேம்பாலம் வரை 500 மீட்டர் தூரத்திற்கு காப்பர் வயர்களை பயன்படுத்தி மின்விளக்கு உதவியுடன் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த காப்பர் வயர்களை பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் திருடிச் செல்வதைக் கண்ட ஊழியர்கள் அவர்களை மடக்கிப் பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வெங்கல் போலீசார், அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் தாமரைப்பாக்கம், அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த குணா என்ற குணசேகரன் (23), ஆகாஷ் (21), வெங்கல் அடுத்த பாகல்மேடு பகுதியைச் சேர்ந்த மற்றொரு ஆகாஷ் (23) என்பது தெரியவந்தது.
இவர்கள் மூவரும் திருடிய காப்பர் வயர்களை எரித்து அதிலிருந்து வரும் கம்பிகளை பழைய இரும்பு கடையில் விலைக்கு போட்டு, அந்த பணத்தை வைத்து குடிப்பதற்கு திட்டம் தீட்டியதாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டனர். இதில் குணசேகரன் மீது ஏற்கனவே 2 கஞ்சா கடத்தல் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் திருடிய காப்பர் வயர்களை பறிமுதல் செய்து 3 பேரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.