திருத்தணி: திருத்தணி, ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட தமிழ்நாடு மற்றும் ஆந்திர அரசு அனுமதி பெற்ற கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளிலிருந்து ஜல்லி, சிப்ஸ், சிறிய, பெரிய ஜல்லி, கட்டுகற்கள் உடைத்து கனரக வாகனங்களில் திருத்தணி, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, அரக்கோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
கனரக வாகங்கள் விதிமுறை மீறி அதிக பாரம் ஏற்றி செல்வதாலும், பாதுகாப்புடன் தார்பாய் போட்டு முழுமையாக மூடாமல் திறந்த நிலையில் கற்கள் மற்றும் என்.சாண்ட் எடுத்துச் செல்வதால் எம்.சாண்ட் காற்றில் வாகனங்களில் செல்வோர், பொதுமக்கள் கண்களில் விழுந்து அவதிப்படுகின்றனர். இதனால் விபத்து அபாயம் உள்ளது.
பரபரப்பாக இயங்கும் திருத்தணி, சோளிங்கர், பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு, நகரி ஆகிய மாநில நெடுஞ்சாலைகளில் மற்றும் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலைகளில் விதிமீறி அதிக பாரத்துடன் பாதுகாப்பின்றி செல்லும் கனரக வாகனங்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் திருத்தணி உட்கோட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனை நடத்த வேண்டிய போக்குவரத்து போலீசார் திருத்தணி நகரில் மட்டும் பெயர் அளவுக்கு சோதனை நடத்துவதால், போக்குவரத்து விதிமீறல்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.