சென்னை: மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பணிபுரிவதை ஒப்பந்ததாரர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் மா.வெங்கடேசன் அறிவுறுத்தி உள்ளார். தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையம் சார்பில் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் நலன் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், ராயபுரம் மண்டல அலுவலகத்தில் ஆணைய தலைவர் மா.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாநகராட்சியில் இலவச கழிப்பறைகளைப் பராமரிக்கும் ஒப்பந்ததாரரிடம் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சென்னை குடிநீர் வாரியத்தில் ஒப்பந்ததாரரிடம் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது அவர் பேசும்போது, ‘‘தூய்மைப் பணியாளர்கள் தங்கள் பணியின்போது கையுறை, காலணி, முகக்கவசம் உள்ளிட்ட உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியாற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கை களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கான ஊதியத்தை முறையாகக் கணக்கிட்டு சரியாக வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும்’’ என்றார்.
முன்னதாக ராயபுரம் மண்டலம் 52-வது வார்டு, பாரத் திரையரங்கம் பின்புறம் உள்ள கழிப்பறை வளாகம், 51-வது வார்டு, மேற்கு கல்லறை சாலையில் உள்ள கழிப்பறை வளாகம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில், வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, தலைமைப் பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) எஸ்.சக்தி மணிகண்டன், கண்காணிப்புப் பொறியாளர் (சிறப்புத் திட்டங்கள்) பி.வி.பாபு, மண்டல அலுவலர் ஜி.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.