திருவொற்றியூர்: மாநகராட்சி தொடக்க பள்ளியில் ஓவியங்களுடன் சீரமைக்கப்பட்ட வகுப்பறையை மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ திறந்து வைத்தார். மணலி மண்டலம், 16வது வார்டுக்கு உட்பட்ட குளக்கரை பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியை சீரமைத்து தர வேண்டும் என்று மாதவரம் வடக்கு பகுதி திமுக செயலாளர் புழல் எம்.நாராயணனிடம் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து வகுப்பறைகளை தூய்மை செய்து வர்ணம் பூசி, குழந்தைகள் படம் பார்த்து படிக்கும் வகையில் வண்ண ஓவியங்கள் தீட்டிக் கொடுக்கும் பணி நடைபெற்றது. பணிகள் முடிவடைந்ததையடுத்து பள்ளி வகுப்பறைகளை பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி புழல் எம்.நாராயணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ கலந்துகொண்டு புதுக்கப்பட்ட பள்ளியை பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பென்சில், பேனா, இனிப்பு ஆகியவற்றை வழங்கினார். இந்த நிகழ்ழ்சியில் பள்ளிக்குத் தேவையான பீரோ, குழந்தைகள் சாப்பிடுவதற்கு தேவையான தட்டு, 200 பெண்களுக்கு புடவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் கண்ணப்பன், ராஜேந்திரன், சிவசங்கரன், சந்திரன், மோகன்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.