டெல்லி: 18 முதல் 45 வயது வரையிலான இளைஞர்களுக்கு ஏற்படும் திடீர் உயிரிழப்புகளுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ICMR மற்றும் எய்ம்ஸ் டெல்லி மருத்துவமனை ஆகியவற்றின் உதவியுடன் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகளுக்கு பிறகு இந்த ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும், கொரோனா தடுப்பூசி காரணமாக எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை எனவும் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
கர்நாடக மாநிலம், ஹாச-ன் மாவட்டத்தில் மாரடைப்பால் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. குறிப்பாக இளம் வயதினர் இறக்கின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 18 பேர் மாரடைப்பால் உயிரிழந்து உள்ளனர். நேற்று முந்தினம் மேலும் 4 பேர் உயிரிழந்தனர்.
கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் அதிகளவு மாரடைப்பு மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், அது குறித்து நிபுணர்கள் குழு அமைத்து விசாரிக்க அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இந்த மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் மட்டும் 21 பேர் மாரடைப்பால் இறந்துள்ளனர். இவர்களில் பாதி பேர் 50 வயதிற்கும் கீழானவர்கள். அதிலும் 5 பேர் 20 வயது மட்டுமே நிரம்பியவர்கள்.
இந்த தொடர் மரணங்கள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மருத்துவ ஆய்வு நடத்தி 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மாநில சுகாதாரத்துறை செயலர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி இம்மரணங்களுக்கு இருக்கலாம் என்பதை புறக்கணிக்க முடியாது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது அதிகரித்து வரும் இளைஞர்கள் திடீர் மரணம் என்பது அவர்களுடைய சுகாதார நிலை அடிப்படையில் தான் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. 18 முதல் 45 வயது வரையிலான இளைஞர்களுக்கு மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 47 மருத்துவமனைகளில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு கொரோனா தடுப்பூசி தான் காரணம் என கூறுவது ஏற்புடையது அல்ல என சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.