காந்திநகர்: கொரோனா இன்னும் ‘உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலாக’ இருப்பதாக உலக சுகாதார நிறுவன இயக்குநர் தெரிவித்தார். குஜராத்தின் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் கன்வென்ஷன் சென்டரில் நடந்த ஜி20 சுகாதார அமைச்சர்கள் மாநாட்டின் தொடக்க விழாவில் உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் கெப்ரேயஸ் பங்கேற்று பேசியதாவது: கொரோனா இனி உலகளாவிய சுகாதார அவசரநிலை அல்ல என்றாலும், உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலாக உள்ளது. உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் ஒரு புதிய மாறுபாட்டை அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகளுடன் வகைப்படுத்தியுள்ளது.
பி.ஏ.2.86 மாறுபாடு தற்போது கண்காணிப்பில் உள்ளது. இது அனைத்து நாடுகளும் கொரோனா உருமாற்றத்தின் கண்காணிப்பை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. அடுத்தாண்டு நடைபெறும் உலக சுகாதார மாநாட்டில் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் ‘தொற்றுநோய் ஒப்பந்தத்தை’ இறுதி செய்யும் செயல்முறையை அனைத்து நாடுகளும் விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.