டெல்லி: நாடு முழுவதும் 1009 பேர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை கணக்கெடுப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதில் தலைநகர் டெல்லி மட்டும் 104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் அங்கு 99 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டு பரவிய கொரோனா தொற்று பரவலில் இருந்து இந்திய உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீண்டு வந்துள்ள நிலையில் தற்போது கொரோனா தொற்று மீண்டும் மெதுவாக தலை தூக்க தொடங்கியுள்ளது.
இந்தச் சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசியாவின் சில பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கடந்த வாரத்தில் மட்டும் இந்தியாவில் 752 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். முந்தைய வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 248ஆக இருந்த நிலையில் கடந்க ஒரே வாரக்கில் வைரஸ் பாதிப்பு 4 மடங்கு அதிகரித்து 1000ஐ தொட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் 1009 பேர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை கணக்கெடுப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதில் தலைநகர் டெல்லி மட்டும் 104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் அங்கு 99 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்துகள், ஆக்சிஜன் வசதி உள்ளிட்டவைகளின் இருப்பை உறுதி செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
சீனா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளை கொரோனா தொற்று அச்சுறுத்திவரும் நிலையில், அதற்கு காரணம் 2 புதிய வகை கொரோனா மாறுபாடு வைரஸ்கள்தான் என உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்து தெரிவித்துள்ளது. அதன்படி, என்பி.1.8.1 மற்றும் எல்எஃப்.7 ஆகிய இரு உருமாறிய கொரோனா வைரஸ்களால் தான், தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 2 வகை கொரோனாவும் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த மாதம் தமிழ்நாட்டில் ஒருவருக்கு என்பி.1.8.1 (NB.1.8.1) வைரஸ் தொற்றும், குஜராத்தில் 4 பேருக்கு எல்எஃப்.7 (LF.7) வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளன. எனினும், இந்த மாறுபாடுகள் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவை அபாயகரமானவை என்று இதுவரை வரையறுக்கப்படவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.