சென்னை: கூட்டுறவுச் சங்கங்களில் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்துதல் குறித்தான ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது.தமிழகத்தில் கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்துதல் தொடர்பாக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் கோபால், இணை செயலாளர் பங்கஜ் குமார் பன்சால், கூட்டுறவு அமைச்சகம், இந்திய அரசு மற்றும் மேலாண்மை இயக்குனர், தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்துடனான கலந்தாலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது.
தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகம் அனைத்து வகையான கூட்டுறவு சங்கங்களுக்கு கடன் வழங்கும் அமைப்பாகவும் கடன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த ஆலோசனை வழங்கும் அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றும் திட்டத்தில் இதுவரை 1960 கூட்டுறவு சங்கங்கள் மாற்றப்பட்டுள்ளது. அரசுத்துறையின் பல்வேறு விதமான மின் சேவைகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் பொருட்டு பொது மக்கள் நலன் கருதி 4465 கூட்டுறவுச் சங்கங்களில் பொது சேவை மையம் நிறுவப்பட்டுள்ளது.
மேலும் 50 விவசாய கூட்டுறவு உற்பத்தி நிறுவனங்கள் கூட்டுறவு சங்கங்களாக மாற்றப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 380 கூட்டுறவு மருந்தகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் விற்பனை செய்யப்படும் மருந்துகளுக்கு 20 சதவீதம் வரை பொது மக்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் விற்பனையோடு தற்போது உயிர் உரங்கள் மற்றும் உயிர் பூச்சிகொல்லிகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றது.
மேலும் 4532 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ஒரே கட்டமாக கணினிமயமாக்கல் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பணிகளை அதிகபடுத்திடவும் அனைத்து சங்கங்களையும் இலாபகரமாக செயல்படுத்திடவும் கூட்டுறவுச் சங்கங்களின் மேம்பாட்டிற்கு தேவையான கூடுதல் நிதியினை பெறுவதற்கும் இது சம்மந்தமான ஒருங்கிணைப்பு பணி மேற்கொள்ளுதல் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், சிறப்புப் பணி அலுவலர் ம.ப.சிவன் அருள், மண்டல இயக்குநர், தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகம், பெங்களூரு, தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.