சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கழுங்குவிளை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளர் அகமது. இம்மாத இறுதியில் அவர் ஓய்வுபெற இருந்த நிலையில் கடன் சங்கத்தில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர் ரூ.50 லட்சம் வரை முறைகேடு செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை சஸ்ெபண்ட் செய்து கூட்டுறவு சங்கங்களின் தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்தபோது முறைகேட்டுக்கு துணைநின்ற கூட்டுறவு சங்க பணியாளர்களான அமுதா, சுப்பிரமணியன் ஆகியோரையும் கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் சக்தி பெமிலா நேற்று சஸ்பெண்ட் செய்தார்.
இந்நிலையில் கழுங்குவிளை கூட்டுறவு கடன் சங்க செயலாட்சியர் பிரபாவதி மற்றும் கூட்டுறவு அதிகாரிகள் சங்க அலுவலகத்தில் கணக்குகளை சரிபார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, கோமானேரி பஞ். துணைத்தலைவர் ஐகோர்ட் துரை மற்றும் நூற்றுக்கணக்கான சங்க உறுப்பினர்கள் திரண்டு வந்து 3 ஆண்டுகளாக புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத செயலாட்சியர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதையடுத்து போலீசார் வந்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.