நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகளை வனத்துறை வெளியிட்டுள்ளது. குன்னூர் அருகே புரூக் லான்ஸ் என்ற பகுதியில் விமலா என்பவரின் குடியிருப்புக்குள் சிறுத்தை நுழைந்ததை அடுத்து அவர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் வனத்துறையினர், உள்ளே இருந்தவர்களை அழைத்து வர சென்றபோது சிறுத்தை தாக்கியது. இதில் குடியிருப்பு உரிமையாளர் விமலா, தீயணைப்புத்துறையினர், செய்தியாளர் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர்.
முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், இணை இயக்குனர் அருண், கால்நடை மருத்துவர் ராஜேஷ் ஆகியோர் சிறுத்தையை வெளியே கொண்டுவர முயற்சித்தனர். ஆனால் வெடிச்சத்தம் காரணமாக சிறுத்தை வெளியே வரவில்லை என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் குடியிருப்பில் இருந்து சிறுத்தை வெளியேறிய காட்சிகளை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். சிறுத்தை புகுந்ததால் லேம்ஸ்ராக், டால்பிளோஸ் செல்லும் சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. வீட்டின் பதுங்கிய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் வெளியேறியது.