ஊட்டி: குன்னூர் பகுதியில் சாலையோரங்களில் பூத்துள்ள ரெட்லீப் மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்ட ரெட்லீப் என்ற சிவப்பு வண்ண மலர்கள் பூக்கும் மரங்கள் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டங்களிலும், சாலையோரங்களிலும் உள்ளன. தற்போது இந்த மரங்களில் பூக்கள் பூக்க தொடங்கியுள்ளன. இந்த வகை பூக்கள் இலையாக இருந்து 4 நிறங்களாக மாறி காண்போரை கவருகின்றன. குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையோரங்களில் உள்ள மரங்களில் ரெட்லீப் பூக்கள் பூத்து உள்ளதால், நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை ரசிப்பதுடன், புகைப்படம் மற்றும் செல்பியும் எடுத்து செல்கின்றனர்.
தொலைவில் இருந்து பார்த்தாலும் இவ்வகை மரங்களின் இலைகள் மலர்களைபோல காட்சி அளிக்கின்றன. முதலில் சிவப்பு நிறத்தில் காணப்படும், பின்னர் சில நாட்களில் பல வண்ணங்களில் காணப்படுகிறது. ரெட்லீப் பூக்கள் குன்னூரில் பல்வேறு பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களிலும் அதிகமாக நடவு செய்யப்பட்டு, பாதுகாக்கப்படுகிறது. தற்போது ரெட்லீப் பூக்கள் பூக்கும் சீசன் துவங்கியுள்ள நிலையில், இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.