ஊட்டி: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குன்னூர் மற்றும் அதனை சுற்றியுளள பகுதிகளில் சாலை ஓரங்களில் உள்ள மழை நீர் கால்வாய்கள் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி 3 மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில், காற்றுடன் கூடிய கனமழை பெய்யும். இதனால், சாலையோரங்களில் உள்ள மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். மேலும், இந்த மழையின் போது சில சமயங்களில் சாலைகளில் மண் சரிவு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. மழைநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு மழை நீர் சாலைகளில் ஓடும்போது சாலை ஓரங்களில் உள்ள தடுப்புச் சுவர்களில் மண் அரிப்பு ஏற்பட்டு தடுப்பு சுவர் இடிந்து விழும். மேலும், அப்பகுதிகளில் மண் சரிவும் ஏற்படும்.
இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி சாலைகளும் பழுதடைந்து வருகின்றன. இதனால், பருவமழை காலங்களில் சாலை ஓரங்களில் உள்ள கால்வாய்களை நெடுஞ்சாலை துறையினர் முன்னதாக தூர்வாருவது வழக்கம். கடந்த ஜூன் மாதம் துவங்கிய தென்மேற்கு பருவமழையின் போது பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னதாக மே மாதங்களில் அனைத்து சாலை ஓரங்களில் உள்ள கால்வாய்களும் தூர்வாரப்பட்டன. இதனால், இம்முறை பருவ மழை காலங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில், அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை துவங்கி இரு மாதங்கள் கொட்டி தீர்க்கும். இந்த மழை நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் மற்றும் கோத்தகிரி போன்ற பகுதிகளில் அதிகளவு பெய்யும். இதனால், இப்பகுதிகளில் உள்ள சாலைகளில் மண்ணரிப்பு ஏற்பட்டு சாலைகள் பழுதடைவது மற்றும் தடுப்பு சுவர் இடிந்து விழுவது போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
எனவே, மழைக்காலங்களில், சாலைகள் மற்றும் சாலை ஓரங்களில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தற்போது குன்னூர் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலை துறையினர் சாலை ஓரங்களில் மழை நீர் கால்வாய்களை தூர் வாரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குன்னூரில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலை, குன்னூரில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலை மற்றும் கிராமப்புறங்களுக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் உள்ள கால்வாய்களில் தூர் வாரும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. மேலும், மழைநீர் செல்லும் சிறு பாலங்கள் மற்றும் மோரிகளிலும் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இதன்மூலம் வடகிழக்கு பருவமழையின் போது சாலைகளில் மண்சரிவு மற்றும் தடுப்பு சுவர் இடிந்து விழுவது போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.