குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான மார்கெட் பகுதியில் சுமார் 800க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இருப்பினும் ஒரு சில கடைகள் இடப்பற்றாக்குறை காரணமாக வி.பி தெரு பகுதியில் விற்பனை செய்யப்படும் பொருட்களை, கடைகளுக்கு வெளியே எடுத்து வைத்து விற்பனை செய்து வந்தனர். இதனால் அவ்வப்போது அப்பகுதியில் போக்குக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மற்றும் மாலை நேரங்களில் அந்த சாலை வழியாக மார்க்கெட் பகுதிகளுக்கு பொருட்கள் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் கூட செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது.
இதனிடையே நகராட்சி அதிகாரிகள் பலமுறை வியாபாரிகளிடம் எச்சரிக்கை செய்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளை முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் வந்தபோது வியாபாரிகள் அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இந்நிலையில் நேற்று ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படும் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக இரண்டாவது முறையாக மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் முன் கூட்டியே நோட்டீஸ் வழங்கினர். ஆனால் வியாபாரிகள் யாரும் தானாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்பதால் நேற்று பலத்த போலீசார் பாதுகாப்புடன் வந்த நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகளை பாரபட்சம் பார்க்காமல் அகற்றினர்.
அப்போது வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி ஊழியர்களை கொண்டு கடப்பாறை வைத்து உடைத்தனர்.இதனிடையே வியாபாரம் செய்ய வைத்திருந்த காய்கறிகளையும், உடைக்கப்பட்ட கடைகளின் பொருட்களையும் நகராட்சி வாகனத்தில் அள்ளி கொண்டு கொண்டு சென்றனர். இதனை கண்டு வியாபாரிகள் கண்ணீர் சிந்தினர். தொடர்ந்து மவுண்ட் ரோடு சாலையில் நடைபாதை கடைகளையும் அகற்றினர்.
எனினும் இனிவரும் காலங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்படாமல் இருப்பதற்கு கடைகளின் முன்பு அளவீடு செய்து மஞ்சள் குறியீடு செய்தனர். அசம்பாவிதங்களை தடுப்பதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே செருப்பு தைப்பவர்களையும் நகராட்சியினர் அகற்ற கூறியதுடன், அவ்வழியாக வந்த விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் சுதாகருக்கும், அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.