குன்னூர் : குன்னூர் அருகே போக்குவரத்து விதிகளை மீறி பிக்கப் வாகனத்தில் தொழிலாளர்களை ஏற்றி செல்லும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் முழுமையாக கடைப்பிடிக்கவேண்டும் என்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அதனை மீறியும் போக்குவரத்து விதிமீறல்கள் பல இடங்களிலும் மறைமுகமான முறையில் நடந்து வருகின்றன. குறிப்பாக மலைத்தோட்ட காய்கறி விவசாயம் மேற்கொள்ளும் பகுதிகளில் சரக்கு வாகனங்களில் தொழிலாளர்களை ஏற்றி செல்லும் அவலம் தற்போது வரை நீட்டித்துள்ளது.
இதனிடையே கடந்த வாரம் கேத்தி பாலடா பகுதியில் பிக்கப் வாகனத்தில் கேரட் மூட்டைகள் மீது அமர்ந்து சென்ற போது வாகனம் கவிழ்ந்து, தேயிலை செடிகளின் நடுவே வீசப்பட்டதில் வட மாநில பெண் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனிடையே லவ்டேல் காவல் நிலைய போலீசார், இதுபோன்று சரக்கு வாகனங்களில் தொழிலாளர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் குன்னூர் அருகேயுள்ள பொரோரையட்டி பகுதியில் இருந்து கேத்தி பாலடா நோக்கி மீண்டும் பிக்கப் வாகனத்தில் விவசாய பணிக்காக தொழிலாளர்களை ஏற்றி செல்லும் சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
எனவே இது போன்ற செயல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுனர்களுக்கு முறையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், தொடர்ந்து விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்களின் மீது தகுதி நடவடிக்கை எடுத்து, தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.