ஊட்டி: குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் உலா வரும் சிறுத்தை வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வன பகுதிகளில் உள்ள சிறுத்தை, யானை, காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உணவு தேடி அடிக்கடி ஊருக்குள் புகுவதால் வனவிலங்கு- மனித மோதல் ஏற்படுகிறது. மேலும், ஊருக்குள் வரும் சிறுத்தைகள், வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடுவது, மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளை வேட்டையாடுவது வாடிக்கையாக உள்ளது.
இது தவிர தேயிலை தோட்டங்களில் சிறுத்தைகள் மற்றும் காட்டுமாடுகள் நடமாட்டம் இருப்பதால் தொழிலாளர்கள், விவசாயிகள் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்ல அச்சப்படுகின்றனர்.இந்நிலையில், குன்னூர் அருகே கரன்சி பகுதியில் தேயிலை தோட்டம் ஒன்றில் பாறை மீது ஒரு சிறுத்தை நேற்று ஒய்யாரமாக அமர்ந்திருந்தது. அது அங்கும் இங்கும் உலா வந்தது. தொழிலாளி ஒருவர் இதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.