நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகாவில் நேற்று முதலே கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குன்னூரில் 10 செ.மீ மழை பெய்துள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
எனவே மாணவ, மாணவிகள் நலன் கருதி குன்னூர் தாலுகாவில் மட்டும் இன்று (நவம்பர் 4) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். முன்னதாக கனமழை கொட்டி தீர்த்ததால் குன்னூர் ரயில் பாதையில் பாறை கற்கள் சரிந்து விழுந்துள்ளன.
இதனை அகற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதையொட்டி மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் குந்தாவில் 4.2 செ.மீ, அருப்புக்கோட்டையில் 2.8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் 3.7 செ.மீ மழை பெய்திருக்கிறது.
தூத்துக்குடியில் 2.1 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. இதையொட்டி தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுடிகளிலும் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.