குன்னூர் : குன்னூர் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் சாரல் மழையிலும் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். குன்னுார் – ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயிலில் பயணம் செய்ய சர்வதேச சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த மலை ரயிலுக்கு, 2005 ல் ‘யுனெஸ்கோ’ அங்கீகாரம் வழங்கியது. இதன்பிறகு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. குன்னூரில் இருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ள, குன்னுார் ரன்னிமேடு ரயில் நிலையத்தை சுற்றிலும் அழகிய மலைப்பகுதிகள் காணப்படுகின்றன.
மேலும், தோட்டக்கலைதுறையின் காட்டேரி பூங்காவும், இதே இடத்தில் உள்ளதால், சுற்றுலா பயணிகள் வந்து செல்ல மிகவும் சிறந்த இடமாக உள்ளது. இந்த நிலையில் நீலகிரியில் அவ்வபோது சாரல் முதல் கனமழை பெய்து கொண்டிருக்கும் சூழலில் சுற்றுலா பயணிகளின் நலனுக்காக சில நாட்களாக நீலகிரியில் உள்ள அனைத்து பூங்காக்களும் அடைக்கப்படுவதும், திறக்கப்படுவதுமாக இருந்து வருகிறது.
இருந்த போதிலும் இதுவரை மலை ரயில் பாதையில் விபத்துகள் ஏற்படாத பட்சத்தில் மலை ரயிலில் பயணம் மேற்கொள்ள சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயில் மூலமாக குன்னூர் வந்த சுற்றுலா பயணிகள் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் இறங்கி சாரல் மழையிலும் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.