*சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
குன்னூர் : குன்னூர் அருகே பந்துமை வனப்பகுதியில் சாலையோரத்தில் நடந்து வரும் செம்மண் கொள்ளையால் தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரத்திற்குட்பட்ட பல பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இப்பணிகளுக்கு செம்மண் அதிக அளவில் தேவைப்படுவதால் பந்துமை வனப்பகுதியின் சாலையோரத்தில் உள்ள அரசு நிலங்களில் செம்மண் கொள்ளை நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அந்த வனப்பகுதியில் செம்மண்ணை வெட்டி எடுத்ததில், பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. செம்மண்ணை வெட்டி எடுத்து, வாகனங்கள் மூலமாக, இரவு நேரத்தில் சமூகவிரோத கும்பல் கடத்தி வருவதாகவும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கடத்தப்படும் இந்த செம்மண்ணை, கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பூச்செடிகள் வளர்க்கும் நிறுவனங்களுக்கு, விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த குற்ற சம்பவங்களிலில் ஈடுபட்டு வரும் நபர்கள் யார் என்று விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.