*பொதுமக்கள் நிம்மதி
குன்னூர் : குன்னூர் அருகே ஊருக்குள் அட்டகாசம் செய்து வந்த கரடி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. கரடி பிடிபட்டதால் சேலாஸ் பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் நகரப்பகுதி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ளது.
குறிப்பாக சிறுத்தை, கருஞ்சிறுத்தை, கரடி, காட்டு மாடுகள் என பல்வேறு வன விலங்குகள் அதிகமாக குடியிருப்பு பகுதிக்கு வருகின்றன. குன்னூர் அருகே உள்ள சேலாஸ் நேரு நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக கரடி அட்டகாசம் செய்து வந்தது. அந்த கரடியை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் வலியுறுத்தி வந்தனர்.
அதன் அடிப்படையில் மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின்பேரில் குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் கடந்த சில நாட்களாக நேரு நகர் பகுதியில் கரடியை பிடிக்க கூண்டு வைத்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கிராமத்திற்குள் உலா வந்த கரடி, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. இதனை அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கூண்டில் சிக்கிய கரடியை வாகனத்தில் ஏற்றினர். பின்னர் ஊட்டி அருகே அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று கரடியை பத்திரமாக விடுவித்தனர். நீண்ட நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த கரடி பிடிபட்டதால் சேலாஸ் நேரு நகர் பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.