காவேரிப்பட்டணம்:திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 வயது சிறுமி காவியாஸ்ரீ, பெட்டிக்கடையில் விற்பனை செய்த குளிர்பானம் குடித்ததில் உயிரிழந்தாள். விசாரணையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட குளிர்பானத்தை சிறுமி குடித்தது தெரிய வந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், குளிர்பான ஆலையில் ஆய்வு நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக அந்த குளிர்பான நிறுவன கிளையான காவேரிப்பட்டணம் அடுத்த சப்பாணிப்பட்டியில் செயல்படும் அலுவலகத்தில் நேற்று உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட குளிர்பானங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. ஆய்வின் முடிவில் தவறுகள் நடந்திருப்பது தெரிய வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.