தேவையான பொருட்கள்:
முள்ளங்கி - 2 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
துருவிய தேங்காய் - 1/2 கப்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 4 டீஸ்பூன்
மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
புளி - சிறிய துண்டு
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
வரமிளகாய் - 6
தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு:
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 1
பெருங்காயத் தூள் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், மல்லி, சீரகம், வரமிளகாய் சேர்த்து நன்கு வறுத்து, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
பின்னர் அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய முள்ளங்கியை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
பின்பு அதில் துருவிய தேங்காயை சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு அதில் கறிவேப்பிலை, புளி, சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
அதன் பின் மிக்சர் ஜாரில் வறுத்த மல்லி சீரகம் வரமிளகாயை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் வதக்கி வைத்துள்ள மற்ற பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்த்து கலந்து விட வேண்டும்.
இறுதியாக சட்னியை தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான முள்ளங்கி சட்னி தயார்.

