கார்த்திகை தீப ரெசிபிகள்
கார்த்திகை தீபம் என்றாலே இனிப்பு அப்பம், பொரி உருண்டை, இனிப்பு பொங்கல் போன்ற உணவுகள்தான் பிரதானமாக இருக்கும். இந்த சிறப்பு உணவுகளை கார்த்திகை மாதத்தில் விரதம் இருந்து, கார்த்திகை தீபத்தன்று வீட்டில் பெண்கள் தயாரித்து விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். தோழியருக்காக கார்த்திகை தீப பிரசாதங்கள் குறித்து விவரித்துள்ளார் சமையல் கலைஞர் வசந்தா.
கார்த்திகை அப்பம்
தேவையானவை:
அரிசி மாவு - 1 கப்,
வெல்லம் - ½ கப்,
நன்கு கனிந்த வாழைப்பழம் - 1,
பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 2 டீஸ்பூன்,
ஏலத்தூள் - ½ டீஸ்பூன்,
எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை:
½ டம்ளர் நீரில் வெல்லத்தை போட்டு கரைத்து வடிகட்டவும். வாழைப்பழத்தை நன்கு மசிக்கவும். பின்னர் மசித்த வாழைப்பழம், அரிசி மாவு, தேங்காய் துண்டுகள், ஏலத்தூள் அனைத்தும் பாத்திரத்தில் போட்டு கலந்து, அதில் வெல்ல நீரை விட்டு, இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும். தேவையானால் சிறிது நீர் விட்டுக் கலக்கலாம். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி பொன்னிறமாக சிவந்ததும் திருப்பிப் போட்டு பொரித்தெடுக்கவும். இதை குழிப்பணியாரக் கல்லிலும் நெய் விட்டு செய்யலாம்.
பனை ஓலை கொழுக்கட்டை
தேவையானவை:
பனை ஓலை நடுப்பகுதி - 10 முதல் 15 துண்டுகள்,
பச்சரிசி மாவு - 2 கப்,
கருப்பட்டி அல்லது வெல்லத் தூள் - 2 கப்,
ஏலத்தூள் - 1 டீஸ்பூன்,
சுக்குப்பொடி - ½ டீஸ்பூன்,
தேங்காய் துருவல் - ½ கப்.
செய்முறை:
கருப்பட்டி அல்லது வெல்லத்தில் நீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, ஏலத்தூள், சுக்குப் பொடி, தேங்காய் துருவல், கருப்பட்டி நீர் ஆகியவற்றை சேர்த்து பிசையவும். மாவு கெட்டியாக இல்லாமல் குழைவாக நீர் விட்டு பிசைந்து ஒரு ஓலையை விரித்து நடுவில் மாவை வைத்து ஓலை அளவிற்கு நீளமாக அழுத்தி மூடி, ஓலை பிரியாமல் இருக்க ஒரு நூல் கொண்டு கட்டி, அனைத்து மாவுகளையும் இது மாதிரி செய்து இட்லி தட்டில் வைத்து 15 அல்லது 20 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுத்து ஆறியபின் ஓலையை பிரித்து கொழுக்கட்டைகளை தனியாக எடுக்கவும். திருக்கார்த்திகை அன்று தென்பகுதி மாவட்டங்களில் செய்யப்படும் சிறப்பு பலகாரம்.
கார்த்திகை பொரி உருண்டை
தேவையானவை:
அவல் பொரி - 8 கப்,
பொடித்த வெல்லம் - 2 கப்,
பொட்டுக்கடலை - ½ கப்,
வறுத்த தேங்காய் துண்டுகள் - ½ கப்,
ஏலத்தூள் - 1 டீஸ்பூன்,
சுக்குப்பொடி - ½ டீஸ்பூன்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த பொரி, பொட்டுக்கடலை சேர்த்து கலக்கவும். ஒரு கனமான பாத்திரத்தில் அரை டம்ளர் நீர் விட்டு, வெல்லம் ேசர்த்து கொதிக்க விட்டு வடிகட்டவும். பின் அதே பாத்திரத்தில் வடிகட்டிய வெல்ல நீரை விட்டு கெட்டிப் பாகு காய்ச்சி அதில் ஏலப்பொடி, சுக்குப்பொடி, வறுத்த தேங்காய் துண்டுகள் போட்டு கிளறி இறக்கி அதில் பொரியை கொட்டி நன்றாக கிளறி சூடு இருக்கும் போதே அரிசி மாவு அல்லது நெய் தொட்டுக் கொண்டு சிறு உருண்டைகளாக உருட்டி பிடிக்கவும். இதே போல் நெல் பொரியில் செய்யலாம்.