தேவையான பொருட்கள்
காளான் - 200 கிராம்
தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 20
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 கொத்து
கடுகு - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
தேங்காய் துண்டுகள் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு மற்றும் தேங்காய் துண்டுகள் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கிய பின், நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும். தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும். அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியா தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். நறுக்கிய காளானைச் சேர்த்து மசாலாவுடன் நன்றாகக் கிளறவும். மிதமான தீயில் மூடி வைத்து 5 நிமிடங்கள் வேகவிடவும். பிறகு மூடியைத் திறந்து, தண்ணீர் வற்றி மசாலா காளானோடு சுருண்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். கடைசியாக மிளகுத் தூள், சிறிது புதிய கறிவேப்பிலை மற்றும் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கிளறி இறக்கவும்.
காளான் நன்மைகள்
காளான் தாவர அடிப்படையிலான சிறந்த புரதமாகும், இது தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.
உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இது மிகச்சிறந்த உணவு.
எலும்புகளை வலுப்படுத்த தேவையான வைட்டமின் D மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதில் அதிகம் உள்ளன.
குறைந்த சர்க்கரை அளவைக் கொண்டிருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.
- ஹேமலதா வாசுதேவன்


