Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பேச்சுலர் நெத்திலி கருவாடு குழம்பு

தேவையான பொருட்கள்:

நெத்திலி கருவாடு - 100 கிராம்

சின்ன வெங்காயம் - 10

பூண்டு - 5 பல்

புளி - நெல்லிக்காய் அளவு

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

தேங்காய்ப்பால் - 1/2 டம்ளர்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

கஸ்தூரி மேத்தி - சிறிதளவு

தேங்காய் எண்ணெய் - அரை குழி கரண்டி

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கருவாட்டை நன்கு அலசி சுடுதண்ணியில் 10 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் மற்றும் பூண்டை இடித்து சேர்க்கவும். நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து எண்ணெயிலேயே வதக்கவும். பச்சை வாசனை போனதும் புளி கரைசலை சேர்க்கவும். அனலை குறைத்து ஐந்து நிமிடம் மூடி வைத்து கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் தேங்காய்ப்பால் சேர்த்து மிதமான தீயில் கிளறவும். கஸ்தூரி மேத்தியை கைகளால் கசக்கி சேர்க்கவும். இப்போது சுடு தண்ணீரில் ஊற வைத்த கருவாடை வடிகட்டி எடுத்துப் போடவும். ஐந்து நிமிடம் மிதமான தீயில் வைத்து கிளறவும். கருவாட்டில் உப்பு இருப்பதால் இப்போது சுவை பார்த்து தேவைப்பட்டால் உப்பை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான நெத்திலி கருவாடு மசாலா தயார்.

குறிப்பு : இந்த மசாலாவில் சுவையைக் கூட்ட கருவாடை எண்ணெயில் பொரித்து சேர்க்கலாம்.

இந்த குழம்பை சாதம், இட்லி, தோசை, பரோட்டா, சப்பாத்தி ஆகியவற்றோடு சேர்த்து சாப்பிடலாம்.

நெத்திலி கருவாட்டின் நன்மைகள்:

புரதம் அதிகம் இருப்பதால் சத்தான உணவாக கருதப்படுகிறது. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும் உடலின் ஆற்றல் உற்பத்திக்கும் உதவுகிறது. அயோடின் இருப்பதால் தைராய்டு சுரப்பி சீராக இயங்க உதவுகிறது. இரும்பு சத்து இருப்பதால் ரத்த சிவப்பணுக்கள் உருவாக காரணமாக இருந்து ரத்த சோகை வராமல் தடுக்கிறது. செலினியம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து செல்களை ஆக்சிடேட்டிவ் செய்வதிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. வைட்டமின் டி இருப்பதால் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. ஒமேகா 3 இருப்பதால் மூளை செயல்பாட்டிற்கும், இதய ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றது.

குறைந்த கலோரி, அதிக புரதம் உள்ளதால் உடல் எடையை குறைக்க நெத்திலி மீன்கள் உதவுகின்றன.

- ஹேமலதா வாசுதேவன்