சென்னை: இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாட்கள் பயணமாக இன்று சென்னை வருவதால், சென்னை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பெங்களூருவில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் இன்று மாலை 6 மணிக்கு புறப்பட்டு, 6.50 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் விமான நிலையத்திலிருந்து காரில் சாலை வழியாக கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்று இரவு அங்கு தங்குகிறார்.
நாளை காலை 9 மணியில் இருந்து 9.30 மணி வரை, ஆளுநர் மாளிகையில் முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். அதன் பின்பு ஆளுநர் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு, ஓஎம்ஆர் சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் செல்கிறார். அங்கு நடக்கும் எட்டாவது பட்டமளிப்பு விழாவில் காலை 10.15 மணி முதல் 11.15 மணி வரை கலந்து கொள்கிறார். அதன் பின்பு காரில் புறப்படும் குடியரசு தலைவர், பகல் 11.55 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கு குடியரசு தலைவருக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் வழியனுப்பு நிகழ்வு நடக்கிறது. தொடர்ந்து பகல் 12.05 மணிக்கு, இந்திய விமானப்படை தனி விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
2 நாள் பயணமாக குடியரசு தலைவர் இன்று சென்னை வருவதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆய்வு செய்ய, டெல்லியில் இருந்து குடியரசு தலைவரின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த ராணுவ அதிகாரிகள், சென்னை விமான நிலையம் வந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று காலை 11.30 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து ஜிஎஸ்டி சாலை வழியாக கிண்டி ஆளுநர் மாளிகை வரையும், அதன் பின்பு ஆளுநர் மாளிகையில் இருந்து ஓஎம்ஆர் சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரையிலும் பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. அதோடு சென்னை விமான நிலையம் மற்றும் அதன் வளாகப் பகுதி முழுவதும் நேற்று காலை முதல் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் நாளை மாலை வரை இருக்கும் என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.