சிம்லா: இறைச்சி சாப்பிடுவதால் தான் நிலச்சரிவு, மேக வெடிப்பு ஏற்படுகிறது என்று ஐஐடி இயக்குனர் கூறிய சர்ச்சை கருத்தால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலம் மண்டியில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) இயக்குனர் லக்ஷ்மிதர் பெஹரா, கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் மாணவர்கள் முன்பு ஆற்றிய உரையில், ‘இமாச்சலப் பிரதேசத்தில் அப்பாவி விலங்குகள் இறைச்சிக்காக கொல்லப்படுகின்றன. மாணவர்கள் நல்ல மனிதனாக மாற வேண்டும் என்றால், இறைச்சி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். இறைச்சி சாப்பிடுவதால்தான் இமாச்சலில் நிலச்சரிவு, மேக வெடிப்பு போன்ற சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. தொடர்ந்து விலங்குகளை துன்புறுத்தி வந்தால், இமாச்சலப் பிரதேசம் அழிந்துவிடும். மாணவர்கள் இனிமேல் விலங்குகளின் இறைச்சி உணவை சாப்பிட மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும். ’ என்றார்.
இவரது கருத்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் அவரது பேச்சுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.