கொடைக்கானல்: கொடைக்கானலில் ரூ.1.7 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு வீட்டு கட்டுமானப் பணிகளை முடிக்காமல், எந்த நேரமும் இடியும் சினிமா செட்டிங் போல தரமற்றதாக பணிகளை செய்துவிட்டு கான்ட்ராக்டர் கொலை மிரட்டல் விடுக்கிறார் என நடிகர் பாபி சிம்ஹா பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் – பழநி சாலை வில்பட்டி ஊராட்சி, பேத்துப்பாறை பகுதியில் நடிகர் பாபி சிம்ஹா தனது பெற்றோருக்காக வீடு கட்டி வருகிறார். இதை கட்டுவதற்கு கொடைக்கானல் மூஞ்சிக்கல்லை சேர்ந்த ஜமீர் என்பவரிடம் கான்ட்ராக்ட் கொடுத்துள்ளார். ஜமீரின் மைத்துனரும், பாபி சிம்ஹாவின் பள்ளி நண்பருமான கொடைக்கானலை சேர்ந்த காதர் இந்த கான்ட்ராக்டுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
ஜமீர் வெளிநாட்டில் இன்ஜினியரிங் படிப்பு படித்ததாக கூறப்படுகிறது. பாபி சிம்ஹா ரூ.1 கோடியே 30 லட்சத்துக்கு வீடு கட்ட கான்ட்ராக்ட் செய்திருந்தார். ஆனால் ஜமீர், கூடுதலான பணிகள் செய்ய வேண்டி இருப்பதாக கூறி ரூ.1 கோடியே 70 லட்சம் பெற்று உள்ளாராம். ஆனாலும் குறிப்பிட்ட காலத்தில் வீட்டின் பணிகளை முடிக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து பாபி சிம்ஹா, வீட்டின் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு ஜமீர் மேலும் கூடுதலாக பணம் கேட்டு உள்ளார். இதற்கு பாபி சிம்ஹா, வீட்டின் பணிகளை முடித்தவுடன் தருவதாக கூறியுள்ளார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு ஜமீர் பணிகளை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.
இதுகுறித்து பாபி சிம்ஹா கொடைக்கானல் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ததன் பேரில் போலீசார் ஜமீர், அவரது தந்தை காசிம், உறவினர் உசேன், பேத்துப்பாறையை சேர்ந்த மகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் உசேன் அளித்த புகாரில் பாபி சிம்ஹா, கேஜிஎப் பட வில்லன் நடிகர் ராமச்சந்திர ராஜூ உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் கொடைக்கானல் வந்த பாபி சிம்ஹா தனது வீட்டுப் பணிகள் எவ்வாறு நடந்துள்ளன என்பது குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ஜமீருக்கு வீடு கட்ட ரூ.1.70 கோடி கொடுத்த அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளன. கூடுதலாக பணம் கேட்டதால் ஏற்கனவே செலவு செய்த பில் தொகையை ஒப்படைத்து விடுமாறு கூறினேன். அன்றிலிருந்து அவர் பல்வேறு காரணங்களை கூறி பணிகளை நிறுத்தி விட்டார்.
இது வீடு அல்ல. சினிமா செட்டிங்தான். இதனுடைய பேஸ்மென்ட் முதல் அனைத்துப் பணிகளும் தரமற்ற நிலையில் உள்ளது. வேறு ஒரு பொறியாளரை கொண்டு ஆய்வு செய்தேன். அவர் இந்த வீடு எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடும் என கூறினார். என்னை ஏமாற்றி பணத்தை பெற்றதோடு, நான் போலி பட்டா வைத்து விதிமுறை மீறி வீடு கட்டியதாக என் மீதே குற்றம் சாட்டுகின்றனர். மின்சார இணைப்பு இல்லை என்றும் கூறுகின்றனர். வீடு கட்ட ஒப்பந்தம் பெற்றவர்தான் விதிமுறைகளுக்குட்பட்டு கட்டிடங்களை கட்டவேண்டும். இங்கு 30 ஆண்டுகளாக வசித்து வரும் எனக்கே கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். என் போன்றவர்களுக்கே இப்படி ஒரு நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும். என்னை ஏமாற்றியவர்கள் மீது நீதிமன்றம் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.