சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் 272வது சிண்டிகேட் குழு கூட்டத்தின் அடிப்படையில், ஒப்பந்த பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களை, தினக்கூலி அடிப்படையில் நியமிக்க ஒப்புதல் வழங்கி பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் கடந்த 20ம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ”பல்கலைக்கழக நிதிக்குழு மற்றும் சிண்டிகேட் குழு எடுத்த முடிவின்படி, புதிதாக மேற்கொள்ளப்படும் உதவி பேராசிரியர், ஆசிரியர் அல்லாத அலுவலர்கள், ஊழியர்கள் நியமனம் தினக்கூலி அல்லது தொகுப்பூதியம் அடிப்படையில் அவுட்சோர்சிங் முறையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். இந்த சூழலில், ஒப்பந்த பேராசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனம் தொடர்பான சுற்றறிக்கையை அண்ணா பல்கலைக்கழகம் திரும்பப் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக, அண்ணாபல்லைக்கழக பதிவாளர் பிரகாஷ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர் அல்லாத தற்காலிக தினக்கூலி ஊழியர்களை பல்வேறு பிரிவுகளின் கீழ் பணியில் ஈடுபடுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கவனக்குறைவு காரணமாக ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுவிட்டது. இந்த பிழையை உணர்ந்து திருத்தப்பட்ட சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை பணியில் ஈடுபடுத்தும் நிலைப்பாடு ஒருபோதும் இருந்ததில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.