சென்னை: குடிநீர் லாரிகளுக்கான புதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தாமதம் செய்வதால், இன்று முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் தீர்வு எட்டாவிட்டால் வரும் 5ம்தேதி முதல் ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம் என்று குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். சென்னை மாநகர மக்களின் தண்ணீர் தேவையை குடிநீர் வாரியம் பூர்த்தி செய்து வருகிறது. குடிநீர் ஆதார ஏரிகளில் தண்ணீர் இல்லாவிட்டால் மாற்று வழிகள் மூலம் மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்து வருகிறது.
இதற்காக சென்னை முழுவதும் அனைத்து தெருக்கள் மற்றும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு மூலம் விநியோகம் செய்து வருகிறது. மேலும் மேடான பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வாய்ப்பில்லாத நிலை உள்ளது. அதுபோன்ற இடங்கள் மற்றும் தண்ணீர் தேவை அதிகமாக உள்ள பகுதிகள், தெருக்களில் வைக்கப்பட்டிருக்கும் குடிநீர் தொட்டிகளுக்கு சென்னை குடிநீர் வாரியம் ஒப்பந்த லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. இதற்காக, ஒப்பந்த அடிப்படையில் சென்னை குடிநீர் வாரியத்துக்கு சுமார் 450 லாரிகள் இயக்கப்படுகின்றன.
இந்த லாரிகள் 6 ஆயிரம், 9 ஆயிரம், 12 ஆயிரம் மற்றும் 18 ஆயிரம் லிட்டர் கொள்ளளவை கொண்டவை. லாரிகளின் உரிமையாளர்கள் ஒப்பந்த் அடிப்படையில் லாரிகளை இயக்கி வருகின்றனர். 2024 பிப்ரவரியுடன் ஒப்பந்தம் முடிந்த நிலையில் மீண்டும் புதிய ஒப்பந்தத்தை அறிவிக்கக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக குடிநீர் லாரி உரிமையாளர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒப்பந்தத்தை இறுதி செய்து பணி ஆணைகளை வழங்க கோரி மெட்ரோ குடிநீர் ஒப்பந்த லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நிர்வாகிகள் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய தலைமை அலுவலகத்துக்கு நேற்று அதிகாரிகளை சந்திக்க வந்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் இல்லாததால், குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் முன்பு நீண்ட நேரம் காத்திருந்தனர். அவர்கள் அதிகாரிகளை சந்தித்து முறையிட உள்ளதாக கூறினர்.
பின்னர் இதுகுறித்து, சென்னை குடிநீர் ஒப்பந்த லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரம், செயலாளர் கேசவராவ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: ஒப்பந்தத்தை நம்பி புதிதாக வாங்கிய லாரிக்கான முதலாம் ஆண்டு காப்பீடு கட்டண தொகை செலுத்துவதற்கான நாட்களே வந்துவிட்டது. ஆனால் இதுவரை ஒப்பந்தம் இறுதியாகவில்லை. இதற்காக நாளை (இன்று) முதல் நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தோம்.
ஆனால் சென்னை குடிநீர் வாரிய உயர் அதிகாரிகள் முக்கிய பணி காரணமாக வெளியூர் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே வேலை நிறுத்தத்தை ஒத்தி வைத்துள்ளோம். 2ம்தேதி (நாளை) எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் போது ஒப்பந்தத்தை இறுதி செய்து ஆணைகளை வழங்காவிட்டால் வரும் 5ம்தேதி முதல் நாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈபடுட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.