சென்னை: சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சென்னை விமானநிலையத்தில் இருந்து விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதை அடுத்து நேற்று முதல் சென்னையில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக சென்னையில் இன்று (NOV.12) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சென்னை விமானநிலையத்தில் இருந்து விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து டெல்லி, மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் 30 முதல் 45 நிமிடங்கள் வரை தாமதமாகவும், ஐதராபாத் செல்லும் இண்டிகோ விமானம் 30 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்படுகிறது.