சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் முறையாக பின்பற்றும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர், பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன்படி கடந்த 6 முதல் 25ம் தேதி வரையிலான 20 நாட்கள், சென்னை பெருநகர காவல் எல்லையில் விபத்தில்லா சென்னையை உருவாக்கும் வகையில் ‘ஜீரோ இஸ் குட்’ என்ற வாசகத்துடன் சென்னை முழுவதும் அனைத்து சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் பதாகைகள் வைத்து வாகன ஓட்டிகளிடம் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அதேநேரம், அனைத்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் அவரவர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 20 நாட்கள் ‘ஜீரோ’ விபத்துக்கள் காட்டும் இன்ஸ்பெக்டர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.1 லட்சம் பரிசு தொகையை யார் பெருகிறார்கள் என்ற போட்டி அனைத்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர்களிடையே உருவாகியுள்ளது. இதனால் அவரவர் காவல் எல்லையில், போக்குவரத்து விதிமுறைகள் குறித்து வாகன ஓட்டிகளிடம் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு போக்குவரத்து ஊழியர்கள், லாரி டிரைவர்கள், ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர்களிடம் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். மேலும், அனைத்து சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் எந்த வித விபத்துக்களும் நடைபெறாமல் தடுக்க மிகவும் கவனத்துடன் சாலைகளில் நின்று பணிகளை செய்து வருகின்றனர்.
அதன்படி கடந்த 6ம் தேதி முதல் ‘ஜீரோ விபத்தில்லா தினம்’ வலியுறுத்தி ஒவ்வொரு நாளும் ஜீரோ விதிமீறல், ஜீரோ அபராதம், ஜீரோ விபத்து என போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 5 நாட்களாக போக்குவரத்து போலீசாரின் தொடர் முயற்சி காரணமாக சென்னை பெருநகர காவல் எல்லையில் ஒரு சிறு விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் இன்றி நேற்று முன்தினம் ‘ஜீரோ விபத்தில்லா நாள்’ என்ற சாதனையை படைத்துள்ளனர். இந்த சாதனையையோட்டி போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர், ‘நன்றி சென்னை’ என்று அனைத்து போக்குவரத்து போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இந்த சாதனை வரும் நாட்களில் பூஜ்ஜிய விபத்துக்கள் நோக்கி தொடர்ந்து பணியாற்றலாம் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த சாதனையை கூடுதல் கமிஷனர் சுதாகர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.