*நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
*விவசாய பணிகள் தீவிரம்
தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் தொடர்மழையால் அணை, ஏரிகள், குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து, வேளாண் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 942 மில்லி மீட்டர். ஆனால், இதுவரை 272.71 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை, சராசரியாக 403.10 மில்லி மீட்டராகும். இதுவரை 32.11 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
ஆனால், கோடைக்காலத்தில் 189.6 மில்லி மீட்டர் மழைக்கு 238.71 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கோடைக்காலத்தை ஒட்டிய நிலையில், தென்றமேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது.
இதனால் நீர்நிலைகளில் நீரவரத்து அதிகரித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை சராசரியாக (அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பரில்) 344.40 மில்லி மீட்டராகும். தர்மபுரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 74 ஏரிகளும், ஊரகத்துறை கட்டுப்பாட்டில் 640 ஏரி, குளங்களும் உள்ளன.
மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே பெய்து வருவதால், ஏரி, குளம், அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. இதனால் விவசாய பணிகள் மும்முரமாக நடக்கிறது.
மாவட்டத்தில் நடப்பாண்டு, வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் 1,72,280 ஹெக்டர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயிறுவகைகள் உள்ளிட்ட உணவு தானிய பயிர்கள் மற்றும் எண்ணெய்வித்துக்கள், பருத்தி, கரும்பு சாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், கடந்த 25ம்தேதி வரை 4,180 ஹெக்டர் பரப்பு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் ராமக்காள் ஏரி, இலக்கியம்பட்டி ஏரி, பிடமனேரி ஏரி, அன்னசாகரம் ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் ஏரி மற்றும் அணைகள் வறண்டு போனது. கடந்த மே மாதத்தில் அக்னி நட்சத்திரத்தில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
அந்த வகையில், ஏற்காடு மலைப்பாதையில் பெய்யும் மழைநீரானது வாணியாறு அணைக்கு வந்தது. அதுபோல் தொப்பையாறு அணைக்கும் நீர் வரத்துள்ளது. சமீபத்தில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்துள்ளது.
சின்னசாறு அணை 50 அடிக்கு 24.11 அடி நீர் இருப்பு உள்ளது. கெசர்குழி அணை 25.26 அடிக்கு 12.79 அடி நீர் இருப்பு உள்ளது. நாகாவதி அணை 24.60 அடிக்கு,10.86 அடி நீர் இருப்பு உள்ளது. தொப்பையாறு அணை 50.18 அடிக்கு 26.87 அடி நீர் இருப்பு உள்ளது.
வாணியாறு அணை 65.27 அடிக்கு 18.37 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. வரட்டாறு அணை 34.45 அடிக்கு 4.90 அடி நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணை மற்றும் சில ஏரிகளுக்கு நீர் வரத்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘மே, ஜூன் மாதங்களில் எதிர்பார்க்காத மழை பெய்துள்ளது. ஜூலை மாதத்தில் தான் பருவமழை தர்மபுரி மாவட்டத்தில் பெய்யும். ஆனால் மே மாதத்தில் இருந்தே மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள், விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்,’ என்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கோடைக்காலத்தில் அணைகளில் இருந்த நீரை, பாசனத்திற்காக திறக்கப்பட்டது. இதனால், அணைகளில் நீர் குட்டைபோல் காணப்பட்டது. கோடைக்காலம் மற்றும் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கியதால், பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு நீர் வரத்து உள்ளது. இதனால் நிலத்தடிநீர் உயர்ந்துள்ளது,’ என்றனர்.