*வனவிலங்குகளை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
ஊட்டி : தொடர் மழையால் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதி பசுமைக்கு திரும்பியுள்ளது. வனவிலங்குகள் சாலையோரம் தென்படுவதால் அவ்வழியாக பயணிக்கும் சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிமீ., பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு புலி, யானை, சிறுத்தை, கரடி, காட்டுமாடு, செந்நாய், ஹைனா எனப்படும் கழுதை புலி, மான்கள் மற்றும் பல்வேறு வகை பறவைகள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன.
இது தவிர தேக்கு மற்றும் ஈட்டி மரங்கள் அதிகளவு உள்ளன. இங்குள்ள வன விலங்குகளின் முக்கிய குடிநீர் ஆதாரம் மாயாறு ஆகும். இதுதவிர வனத்திற்குள் கேம் ஹட், ஓம்பெட்டா ஏரிகள், 50க்கும் மேற்பட்ட சிறு சிறு நீர்நிலைகள் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது நீர்நிலைகளில் நீர் நிரம்பி குடிநீர் தட்டுபாடு ஏற்படாது. கடந்த ஆண்டு பெய்த பருவமழை மற்றும் நடப்பாண்டில் கோடை காலத்திலும் பெய்த பரவலாக பெய்த மழை காரணமாக இந்த நீர்நிலைகளில் நீர்மட்டம் சரியவில்லை. இதனால் குடிநீர் தட்டுபாடு ஏற்படவில்லை.
இந்த சூழலில் நடப்பாண்டில் முன்கூட்டியே மே மாதம் 3வது வாரத்திலேயே ெதன்மேற்கு பருவமழை துவங்கியது. பந்தலூர், கூடலூர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த 1 மாத காலத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் பசுமை திரும்பின.
இடம்பெயர்ந்த வன விலங்குகளும் திரும்பின. மாயாற்றிலும் நீர் வரத்து அதிகரித்தது. வன விலங்குகளின் முக்கிய குடிநீர் ஆதாரமான கேம்ஹட், ஒம்பெட்டா ஏரியும் நிரம்பியது. இதனால் குடிநீர் பற்றாக்குறையானது முழுமையாக நீங்கியது.
மான், யானை, மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையோரங்களில் உலா வருகின்றன. இவற்றை அவ்வழியாக பயணிக்கும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் கூறுகையில், ‘முதுமலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெய்து வரும் மழை காரணமாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் வரும் காலங்களில் வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுபாடு இருக்காது.
வடகிழக்கு பருவமழையும் நன்கு பெய்யும் பட்சத்தில் நீர்நிலைகள் முழுமையாக நிரம்ப வாய்ப்புள்ளது. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையோரம் உலா வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி இறங்குவதோ அவற்றின் அருகில் செல்வது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும், என்றனர்.