ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஒருசில மாவட்டங்களில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. குஜராத், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாகவே தொடர் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தானின் ஜோத்பூர், ஜெய்சல்மார், பாலி, ஆஜ்மீர், பார்மர், பில்வாரா, கேக்ரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை நீடிக்கிறது.
வானிலை ஆய்வு மைய அறிக்கயைின்படி, “ஜெய்சால்மார் மாவட்டத்தில் உள்ள ஜெய்ப்பூர், மோகன்கர், பனியானாவில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி முறையே 260மி.மீ. மற்றும் 206 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. பாலியில் 257 மி.மீ. மழையும், ஜோத்பூர் மாவட்டம் டெச்சுவில் 246 மி.மீ. மழையும் பதிவானது.
அடுத்த 24 மணி நேரத்தில் குறிப்பாக வடமேற்கு ராஜஸ்தானில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு ரயில்வே ஜோத்பூர் கோட்டத்துக்குள்பட்ட மார்வார் – காரபீத்தாடி மற்றும் பலோடி – மலார் ஆகிய பகுதிகளில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சபர்மதி – ஜோத்பூர் சிறப்பு ரயில் இன்று வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.