மார்த்தாண்டம் : தொடரும் மழையால் மார்த்தாண்டம் மார்க்கெட்டில் காய்கறி விலை கடுமையாக ஏறியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று வானம் மப்பும் மந்தாரமுமாகவும் வெயிலாகவும் மாறி மாறி காணப்பட்டது.மார்த்தாண்டம் மார்க்கெட்டை பொறுத்த அளவில் கடந்த ஒரு மாதமாக காய்கறி விலை மிகவும் குறைவாக காணப்பட்டது இதனால் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சி நடத்துபவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் தற்பொழுது தொடர்ந்து பெய்து வரும் மழையால் காய்கறி விலை கடுமையாக ஏறி உள்ளது. கடந்த வாரம் வரை ஒரு கிலோ வெள்ளரிக்காய் ₹10 ஆக இருந்தது தற்பொழுது ₹560 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெண்டைக்காய் ₹15ல் இருந்து ₹40 ஆகவிலை ஏறி உள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான வீடுகளிலும் முருங்கைக்காய் காய்த்து குலுங்கியது இதனால் ஒரு கிலோ முருங்கைக்காய்₹10க்கு விற்பனையாகியது. தற்பொழுது கிலோ ₹50 ஆக ஏறி உள்ளது. இதை போல் ஒட்டு மாங்காய் ஒரு கிலோ ₹120, ஒரு கிலோ பீன்ஸ் ₹120, எலுமிச்சம் பழம் ₹100 என விலை உயர்ந்து உள்ளது இருப்பினும் வியாபாரம் அமோகமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து மார்த்தாண்டம் மார்க்கெட் காய்கறி வியாபாரி சிவகுமார் கூறியதாவது: பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் காய்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதனால் வெள்ளரிக்காய், முருங்கைக்காய், ஒட்டு மாங்காய், பீன்ஸ், வெண்டைக்காய், எலுமிச்சம்பழம் போன்றவை விலை ஏறி உள்ளது தொடர்ந்து மழை பெய்தால் மேலும் விலை ஏறலாம் என எதிர்பார்க்கிறோம் இவ்வாறு கூறினர்.