பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்க துவங்கியுள்ளது. பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து மே மாதம் துவக்கம் வரை வெயிலின் தாக்கத்தால் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வன பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் இன்றி வறண்ட நிலையில் காணப்பட்டது.
இடையிடையே ஏப்ரல் மாதத்தில் கோடை மழை பெய்தாலும், அந்த மழையால் தண்ணீர் வரத்து என்பது போதியளவு இல்லாமல் போனது. இதனால், வனப்பகுதியில் உள்ள நீரோடை மற்றும் சிற்றருவிகளில் தண்ணீர் வரத்து சொற்ப அளவிலே இருந்தது. இதில், ஆழியார் அருகே உள்ள நவமலை நீரோடையில் தண்ணீர் வரத்தின்றி வறண்ட நிலையில் காணப்பட்டது. வன நீரோடைகளில் தண்ணீர் இல்லாததால் விலங்குகள் அடிக்கடி இடம்பெயர்ந்தது.
இந்நிலையில், கடந்த மே மாதம் மூன்றாவது வாரத்திலிருந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவமழை பெய்ய துவங்கியது. அதன்பின் இரண்டு வாரத்துக்கு முன்பு மீண்டும் பருவமழை வலுத்தது. இதனால், வனப்பகுதியில் உள்ள சிற்றருவி, நீரோடைகளில் தண்ணீர் அதிகளவு வர துவங்கியது. அதிலும், நவமலை மற்றும் சர்க்கார்பதியில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது.
கவியருவியில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வனத்திற்குள் பாயும் நீரோடைகளில் தடையை மீறி யாரேனும் சென்று நீராடுகிறார்களா என தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.