தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையே காவிரி நீர் பங்கீடு செய்வது தொடர்பாக நீண்டகாலமாக பிரச்னை இருந்து வருகிறது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி கர்நாடக அரசு, தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும். ஆனால், கர்நாடகா அரசு, பல நேரங்களில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்றுவதில்லை. தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை திறந்து விடுவதில்லை. மேலும், தங்களுக்கே தண்ணீர் இல்லை என்ற காரணத்தை கூறி தப்பித்து வருகிறது. கர்நாடக அரசின் இந்த பிடிவாத போக்கினால், தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகள் பாதிக்கப்படுகிறது.
மேட்டூர் அணைக்கும் உரிய நீர் கிடைக்காத சூழல் உருவாகிறது. இதற்கிடையே, காவிரிக்கு குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்டவும் கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால், இருமாநில தலைவர்கள் இடையே கருத்து மோதல்கள் வெடித்துள்ளன. இந்நிலையில்தான், டெல்லியில் நேற்று முன்தினம் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து பேசியுள்ளார். தமிழ்நாட்டுக்கு, காவிரியில் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறக்காமல் உள்ளது.
இதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் அவரிடம் வழங்கியுள்ளார். ‘‘கர்நாடக அரசு, காவிரியில், தமிழ்நாட்டுக்கு நடப்பாண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதம் 3ம் தேதி நிலவரப்படி 12.213 டிஎம்சி தண்ணீர் திறந்திருக்க வேண்டும். ஆனால், மிக குறைந்த அளவில் மட்டுமே தண்ணீர் கிடைத்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்துக்கான தண்ணீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனை முறையாக பின்பற்ற, கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ எனவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது எனவும் வலியுறுத்தி உள்ளார். ஏற்கனவே, கடந்த 5ம் தேதி ஒன்றிய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை, துரைமுருகன் சந்தித்து இதே கோரிக்கையை முன்வைத்தார். அடுத்த 15 நாளில் மீண்டும் துரைமுருகன் ஷெகாவத்தை சந்தித்து பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1924-ம் ஆண்டுகளில், வருடத்துக்கு 378.40 டிஎம்சி தண்ணீரை கர்நாடகாவிடம் இருந்து பெற்று வந்த தமிழகம், அதை உறுதிசெய்ய கோரிக்கை விடுத்து, காவிரி தீர்ப்பாயத்தை நாட, 1991-ம் ஆண்டு காவிரி தீர்ப்பாயம் கொடுத்த இடைக்கால தீர்ப்பில் தமிழகத்தின் பங்கு 205 டிஎம்சியாக குறைக்கப்பட்டது.
இது நிச்சயம் போதாது என முறையிட, 2007-ல் வந்த காவிரி தீர்ப்பாயத்தின் இறுதித்தீர்ப்பு, 192 டிஎம்சிதான் தமிழகத்துக்கு வந்துசேரும் என்றது. இது, நியாயமற்றது என உச்சநீதிமன்றத்தை நாட, இன்னும் 14.75 டிஎம்சியை குறைத்து, தமிழகத்துக்கான பங்கீடு 177.25 டிஎம்சிதான் என்றது. இதற்காக போராடிய இந்த அரை நூற்றாண்டு காலத்தில், தமிழ்நாடு தன்னுடைய முழு உரிமையையும் இழந்து நிற்கிறது. 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் பெற்றதை, அடுத்தடுத்து இழந்து வருகிறது தமிழ்நாடு. 1924-ல் ஒப்பந்தம் துவங்கி 2018-ல் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரை தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் முழுமையாக கிடைக்கவில்லை. தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.