சென்னை: தொடர் தோல்விகளால் எடப்பாடி பழனிசாமியை அதிமுக மாஜி அமைச்சர்கள் புறக்கணிக்க தொடங்கியுள்ளனர். அதேநேரத்தில் தேர்தலில் வேலை செய்யாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். இதனால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக எடப்பாடி பழனிசாமியின் கைக்கு வந்த பிறகு தொடர்ந்து 10 தோல்விகள் ஏற்பட்டுள்ளன. எம்பி தேர்தலில் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சேர்க்காததால்தான் தோல்வி என்று ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்கள் கட்சிக்குள்ளேயே கலகம் ஏற்படுத்தினர். பின்னர் பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதும், அதிமுகவுக்கு எதிராக பன்னீர்செல்வம் செயல்பட்டு வந்தார். அதிமுகவை எதிர்த்தே போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது, அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார்.
பாஜவுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்காததால் தான் தோல்வியடைந்துள்ளதாக அதிமுக மூத்த தலைவர்கள் சிலர் தற்போது வெளிப்படையாக கூறத் தொடங்கியுள்ளனர். ஆரம்பத்தில் வேலுமணிதான் இந்த குரலை உயர்த்தினார். ஆனால் அதை அதிமுக தலைவர்கள் மீதான குற்றச்சாட்டாக வைக்காமல், அண்ணாமலை மீது வைத்தார். ஆனால் வேலுமணி கூறியது அவரது சொந்த கருத்து. கட்சியின் கருத்தல்ல என்று மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்தார். இதனால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது.
ஆனால், எடப்பாடி பழனிசாமியோ மாற்றுக் கோணத்தில் சிந்திக்கிறார். பாஜ கூட்டணியில் பெரிய கட்சியாக இருந்த அதிமுகவை அண்ணாமலை உதாசீனப்படுத்தினார். அண்ணாவையே அண்ணாமலை அவமானப்படுத்தி பேசினார். ெஜயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மாஜி அமைச்சர்கள் என பலரையும் அவனமாப்படுத்தினார். அமித்ஷாவிடம் புகார் செய்ய எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றால், மற்றொரு அறையில் இருந்து அண்ணாமலையை வரவழைத்து பேசுகின்றனர். இதைவிட அவமானம் வேண்டுமா? தமிழர்கள் தன்மானம் மிக்கவர்கள். அதனால்தான் தன்மானத்தோடு தேர்தலில் தனித்துப் போட்டியிட்டோம்.
பாஜ இந்த அளவு தோல்விக்கு அதிமுகவும் ஒரு காரணம். அதிமுக கூட்டணியை இழந்ததற்கு மேலிட பாஜ தற்போது வருந்துகிறது. ஆனால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறது.
அதிமுக, பாஜ கூட்டணி அமைத்துப் போட்டியிட்டிருந்தால், சீட்டுக்காக அண்ணாமலை பிரச்னை செய்திருப்பார். கோவையில் ஒருவேளை வெற்றி பெற்றிருந்தால் இது முழுக்க முழுக்க தனக்கு கிடைத்த ஓட்டு என்று கூறியிருப்பார். ஒன்றிய அமைச்சராகவும் ஆகியிருப்பார். அதிமுகவை உடைக்கும் வேலையை தொடங்கியிருப்பார். அதிமுகவை ஓரங்கட்டும் வேலையை தொடங்கியிருப்பார்.
ஆனால் தான் எடுத்த முடிவால் இந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாஜவுக்கு தமிழகத்தில் ஒரு சதவீத ஓட்டு குறைந்துள்ளது. மாறாக, அதிமுக ஒரு சதவீத ஓட்டு அதிகம் வாங்கியுள்ளது. அகில இந்திய அளவில் பாஜவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதற்கு எல்லாம் காரணம் நாம்தான். மக்களவை தேர்தலில் இழப்பு ஏற்பட்டதால் நமக்கு எந்த பாதிப்பும் இல்லை. வெற்றி பெற்றாலும் தமிழகத்துக்கு எதுவும் செய்ய மாட்டார்கள். நாம் சட்டப்பேரவையில் நமது திறமையை நிரூபிப்போம் என்று தன்னை சந்திக்க வருபவர்களிடம் எடப்பாடி கூறி வருகிறார்.
இந்தநிலையில், பெருந்துறையில் எடப்பாடி பழனிசாமியிடம் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ராஜாவின் மகள் திருமண வரவேற்பு நேற்று முன்தினம் மாலை நடந்தது.
இந்தநிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசியுள்ளனர். அவர்களிடம் பேசிய தங்கமணி, ‘‘நாம் சொன்னால் எடப்பாடி பழனிசாமி கேட்பதில்லை. பாஜவுடன் கூட்டணி வைத்திருக்கலாம். ஆனால் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறார்’’ என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மற்றவர்களும் அதை ஆமோதித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி, மேடைக்கு 10 நிமிடத்தில் வந்துவிடுவார் என்று அறிவித்தபோது, திருமண மண்டபத்தில் இருந்து தங்கமணி மட்டும் நாமக்கல்லுக்கு புறப்பட்டுச் சென்று விட்டார். எடப்பாடி பழனிசாமியை வரவேற்கவோ, சந்திக்கவோ முயற்சிக்கவில்லை. எடப்பாடி வந்து, மணமக்களை வாழ்த்திய பிறகு மக்களுடன் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். அப்போது வந்த முன்னாள் அமைச்சர் வேலுமணியும், எடப்பாடிக்கு வணக்கம் தெரிவித்து விட்டு, கோவைக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடன் சாப்பிடவோ, தனியாக பேசவோ இல்லை.
மணமக்களை ஆசீர்வாதம் செய்த எடப்பாடி, அங்கிருந்து நேராக கோவை விமானநிலையம் சென்று சென்னை திரும்பினார். கோவை விமானநிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை வேலுமணி வரவேற்றார். அப்படி என்றால், திருமண மண்டபத்தில் எடப்பாடியுடன் இருந்திருக்கலாம். பின்னர் இருவரும் ஒன்றாக விமானநிலையம் வந்திருக்கலாம். ஆனால் அவ்வாறு வேலுமணி செய்யவில்லை. இதனால் வேலுமணியும் மறைமுகமாக தன்னுடைய எதிர்ப்பைத்தான் தற்போது பதிவு செய்கிறார் என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.
இவ்வாறு மாஜி அமைச்சர்கள் புறக்கணிக்கத் தொடங்கினாலும், சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் விதத்தில் கட்சியை சீரமைக்க முடிவு செய்துள்ள எடப்பாடி, கட்சிக்கு உண்மையாக உழைப்பவர்களுக்கு பதவி கொடுக்க முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கிவிட்டாராம். இதற்கான ஆய்வுகளையும் அவர் நடத்தி வருகிறாராம்.