திருமலை: நாடு முழுவதும் முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு தக்காளி விலை தற்போது கடும் உச்சத்தில் உள்ளது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் தக்காளி பயன்பாட்டை பெரும்பாலும் குறைத்துவிட்டனர். ஒவ்வொரு நாளும் தக்காளியின் விலை தங்கம் விலையை போன்று கூடிக்கொண்டே போவதால் கடும் கிராக்கி ஏற்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து டெல்லிக்கு தக்காளி லோடு ஏற்றிச்சென்ற லாரி தெலங்கானா அருகே கவிழ்ந்தது. இதுபற்றிய விவரம்:
கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து டெல்லிக்கு 18 டன் தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு லாரி சென்றுகொண்டிருந்தது. இந்த லாரி தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவலா பைபாஸ் சாலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர், கிளீனர் லேசான காயத்துடன் தப்பினர். இதற்கிடையில் லாரியில் இருந்த தக்காளி சாலை முழுவதும் சிதறியது. தற்போது கடும் விலை உயர்வால் தவித்த அப்பகுதி மக்கள், அங்கு விரைந்து சென்று தக்காளிகளை பைகள், பாத்திரங்களில் போட்டிபோட்டு அள்ளிச்சென்றனர்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த லாரி டிரைவர், கிளீனர் ஆகியோர் உடனடியாக போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்தனர். போலீசாரை வந்தபோதும் பொதுமக்கள் அவர்களை கண்டுகொள்ளாமல் தக்காளிகளை அள்ளிச்செல்வதில் குறியாக இருந்தனர். இதனால் போலீசார் அவர்களை லேசான தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
டெல்லி, குர்கான், லக்னோ போன்ற நகரங்களில் தற்போது கிலோ தக்காளி ரூ.250க்கு விற்கப்படுகிறது. இதனை கருத்தில்கொண்டு கர்நாடாகாவில் இருந்து தக்காளி வியாபாரிகள் ஒன்றிணைந்து டெல்லியில் விற்பதற்காக லாரியில் அனுப்பியதாக டிரைவர் தெரிவித்தார். இதனிடையே மாற்று லாரி வரும்வரை தக்காளிக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என லாரி டிரைவர் மற்றும் கிளீனர் கேட்டுக்கொண்டனர். அதற்கேற்ப சுமார் 6 மணிநேரம் வரை போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் மாற்று லாரி வந்தவுடன் அவற்றில் ஏற்றிக்கொண்டு அதன் டிரைவர்கள் புறப்பட்டனர்.