மும்பை: : கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பைஸ் பிவண்டிவாலா மற்றும் பர்வேஸ் வைத் ஆகிய இருவரையும் மகாராஷ்டிரா மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். பிவண்டிவாலாவிடம் இருந்து 600 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இருவர் மீதும் உபா மற்றும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருவரும் சர்வதேச பயங்கரவாதி தாவூத் இப்ராகிமின் கோஷ்டியை சேர்ந்தவர்கள் என்றும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும் ஜாமீன் கோரி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் பாரதி டாங்கிரே மற்றும் மஞ்ஜூஷா தேஷ்பாண்டே ஆகியோரை கொண்ட அமர்வு இருவரையும் தலா ரூ.50,000 ரொக்க ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டது. தீர்ப்பில் நீதிபதிகள், ‘‘தாவூத் இப்ராகிம் தனிப்பட்ட முறையில் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதி ஒன்றிய அரசும் இதனை தெரிவித்துள்ளது. எனவே தாவூத்துடன் தொடர்புடையவவர்கள் அனைவரையும் தீவிரவாதிகள் என அறிவிக்க முடியாது. எனவே கைது செய்யப்பட்ட இருவர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியாது’’ என உத்தரவிட்டனர்.