திண்டிவனம்: திண்டிவனத்தில் பாமக மாவட்ட செயலாளர்கள், தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பாமக இணை பொதுச்செயலாளராக சேலம் அருள் எம்எல்ஏ நியமித்தும் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு பதிலடியாக அருளின் மாவட்ட செயலாளர் பதவியை பறித்து புதிதாக ஒருவரை அன்புமணி நியமித்து உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாமகவில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் ஒரு முடிவுக்கு வராமல் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே செல்கிறது. செயல்தலைவர் பதவியை அன்புமணி ஏற்க மறுத்து பிடிவாதமாக இருப்பதால், என் மூச்சு இருக்கும் வரை நானே தலைவராக இருப்பேன் என அறிவித்து ராமதாஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பாமகவில் இதுவரையிலும் 78 புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் 61 புதிய மாவட்ட தலைவர்களை ராமதாஸ் நியமனம் செய்துள்ளார். அதற்கேற்றார்போல் நிர்வாகிகள் கூட்டத்தை அவ்வப்போது நடத்தி கட்சியை தன் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் சுறுசுறுப்பாக இறங்கி உள்ளார். அன்புமணி ஆதரவாளர்களை தொடர்ந்து ஓரம்கட்டி வரும் ராமதாஸ், பொதுச்செயலாளர், பொருளாளர் என முக்கிய நிர்வாகிகளையும் நீக்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறார். ஓரிரு தினங்களுக்கு முன்பு தனது கட்சி எம்எல்ஏக்களான மேட்டூர் சதாசிவம், மயிலம் சிவக்குமார் பதவிகளை அதிரடியாக ராமதாஸ் பறித்தார்.
இதுஒருபுறமிருக்க பாமகவில் தனது அதிகாரத்தை நிலைநிறுத்த அன்புமணியும் மாவட்டம்தோறும் சென்று மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை நடத்தி வருகிறார். இதுவரை 10 மாவட்டங்களுக்கு சென்று மாவட்ட பொதுக்குழுவை கூட்டி தன் செல்வாக்கை நிரூபித்தார். தொடர்ந்து இரண்டாம் கட்டமாக அவர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடத்த தயாராகி வருகிறார். இதுமட்டுமல்லால் 100 நாள் நடைபயண திட்டத்ைத அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார். ஜூலை 25ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் இந்த நடை பயணத்தை அவர் துவங்குகிறார். ராமதாசுடன் நெருக்கமாக உள்ள தனது முன்னாள் உதவியாளர் சுவாமிநாதனிடம் பாமகவினர் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என அறிவித்தார். இதனிடையே பாமக நிறுவனர் ராமதாசின் 60வது திருமண நாள் தைலாபுரத்தில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதில் அவரது மகள்கள் காந்திமதி, கவிதா குடும்பத்தினர் பங்கேற்று ராமதாஸ்- சரஸ்வதி இருவரிடமும் ஆசிபெற்று திருமண நாளை கொண்டாடினர். ஆனால் ராமதாசின் ஒவ்வொரு திருமண நாளின்போதும் தைலாபுரம் இல்லத்துக்கு குடும்பத்துடன் வரும் அன்புமணி தற்போது புறக்கணித்ததன் மூலம், விரிசல் அதிகமாகி இருப்பதை பாமகவினரே முணுமுணுக்க தொடங்கினர்.
இந்நிலையில் தைலாபுரத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் வன்னியர் சங்க மாவட்ட தலைவர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பாமக மாநில தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், பொதுச்செயலாளர் முரளி சங்கர், பொருளாளர் சையது மன்சூர் உசேன், சமூக நீதிப் பேரவை தலைவர் கோபு, சமூக முன்னேற்ற சங்கம் சிவப்பிரகாசம், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பூ.தா.அருள்மொழி, முன்னாள் மாநிலத் தலைவர் பேராசிரியர் தீரன், சேலம் மேற்கு எம்எல்ஏ அருள், மகளிரணி தலைவி சுஜாதா, விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கவுரவ தலைவர் எம்எல்ஏ ஜி.கே.மணி கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டம் தொடங்கியதும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை ராமதாஸ் அறிமுகம் செய்து வைத்தார். கூட்டத்தில், பூம்புகார் மகளிர் மாநாட்டை சிறப்பாக நடத்துவது, 5 லட்சம் மகளிரை சீருடையுடன் அழைத்து வருவது குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அன்புமணிக்கு ஆதரவாக செயல்படும் நிர்வாகிகளை களை எடுப்பது குறித்தும், கட்சியின் நடவடிக்கைகள், பிரதான முடிவுகள் பற்றியும், பொதுக்குழு கூட்டம் கூட்டுவதற்கான தேதி குறித்தும் விவாதித்து ராமதாஸ் முக்கிய முடிவுகளை எடுத்திருப்பதாக கூறப்படுகின்றன.
மேலும், பாமகவில் மாநில இணை ெபாதுச்செயலாளர் பதவியை புதிதாக உருவாக்கி உள்ள ராமதாஸ், அந்த பதவிக்கு சேலம் அருள் எம்எல்ஏவை நியமித்து உத்தரவிட்டு அறிவிப்பை வெளியிட்டார். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் அனைவரும் கைதட்டி வரவேற்றனர். பாமகவின் பொதுச்செயலாளராக சமீபத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட முரளி சங்கருக்கு உதவியாக அருள் எம்எல்ஏவை ராமதாஸ் நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அருள் எம்எல்ஏவின் மாவட்ட செயலாளர் பதவியை பறித்து செயல் தலைவர் அன்புமணி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாநகர், மாவட்ட செயலாளராக இருந்த அருளை, அப்பொறுப்பில் இருந்து நீக்கி பாமக சேலம் மாநகர், மாவட்ட செயலாளராக சரவணன் என்பவரையும், சேலம் மாநகர், மாவட்ட தலைவராக குமார் என்பவரையும் நியமித்தும் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அருள் எம்எல்ஏவிடம் கேட்டபோது அவர் கூறுகையில், இன்று (நேற்று) பாமக நிறுவனர் ராமதாஸ் என்னை பாமக மாநில இணை பொதுச்செயலாளராக நியமித்தார். அந்த நிமிடத்தில் இருந்து நான் சேலம் மாநகர், மாவட்ட செயலாளர் பதவி வகிக்க முடியாது. கட்சியில் ஒரு பதவி மட்டும்தான். மேலும் என்னை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் நிறுவனருக்கும், தலைவருக்கும் மட்டும் தான் உள்ளது. அன்புமணி செயல் தலைவராக உள்ளார். எனவே அவருக்கு என்னை பதவியில் இருந்து நீக்க அதிகாரம் இல்லை’ என்றார்.
தைலாபுரத்தில் நேற்று அன்புமனியை விமர்சித்து அருள் பேட்டியளித்த சில மணி நேரங்களில் அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தந்தை-மகன் யுத்தம் தொடர்வதால் பாமக விரைவில் இரண்டாக பிளவுபடும் சூழலை நோக்கி நகர்வதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.