சென்னை: திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஓடுதளப் பாதை விரிவாக்கப் பணிகள் மற்றும் பயணிகள் வசதி குறித்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவருடன் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார். கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரிகள், விமான நிலைய தொழில்நுட்ப மற்றும் அளவீடு செய்யும் குழுக்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து துரை ைவகோ எம்.பி கூறியதாவது: பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள நிலங்களை விமான நிலைய ஓடுதள பாதை விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக இன்று ஆய்வுப் பணிகளையும் மேற்கொள்ள இருக்கிறார்கள். விமான நிலையங்களுக்கு பயணிகளோடு வருபவர்களுக்கு தற்போது ஒரே இடத்தில் தான் கழிப்பறை வசதி உள்ளது.
வருகை மற்றும் புறப்பாடு ஆகிய இரண்டு பகுதிகளிலும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும், பயணிகளிடம் டாக்சி கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஆகவே, நிலையான கட்டண அறிவிப்பு செய்யும் பலகை ஒன்றை விமான நிலையத்தில் வைக்க வேண்டும். பயணிகளின் நலன் கருதி விமான நிலையத்தில் எவ்வளவு தூரம் ஆட்டோக்களை அனுமதிக்க முடியுமோ அந்த இடத்தில் ஒரு ஆட்டோ நிறுத்துமிடம் அமைக்க வேண்டும்.
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் திருச்சி விமான நிலையத்திற்கு மூன்று வேளை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வசதியைப் பொருத்து பேருந்துகளின் எண்ணிக்கை கூடுதலாக்கப்படும். பேட்டரி கார் போன்ற இலவச ஊர்திகளை இயக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்.