*பாஜகவின் செல்வாக்கு சரிவதால் உதிரி கட்சிகளுக்கு வலை
*தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பா?
புதுடெல்லி: மத்தியில் ஆட்சியை பிடிக்கும் வகையில் வரும் 18ம் தேதி எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவிலும், ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியிலும் நடக்கிறது. இந்த கூட்டத்தில் அதிமுக பங்கேற்குமா? புறக்கணிக்குமா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தாண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலைக் கருத்தில் கொண்டு, ஆளும் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட 17 எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஜூன் 23ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தின. அப்போது பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்வது, அதற்கான வியூகங்களை வகுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டம், வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் பெங்களூருவில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்கட்சிகளின் வியூகங்களை முறியடிக்கும் வகையில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் வரும் 18ம் தேதி ெடல்லியில் நடைபெற உள்ளதாக பாஜக தலைமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பாஜக தேசிய தலைவர்கள் கூறுகையில், ‘வரும் 18ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது. அந்த கூட்டத்தில் சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து, மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவார், சிவசேனாவில் இருந்து பிரிந்து மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.
இந்த இரு தலைவர்களின் தலைமையில் செயல்படும் கட்சிகள், பாஜகவுடன் எதிர்வரும் தேர்தலில் கூட்டணி அமைக்கும். அதேபோல் முன்னாள் ஒன்றிய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி தலைவரும் மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் மகனான சிராக் பாஸ்வானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அவரது கட்சி மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேரும். ஓம் பிரகாஷ் ராஜ்பரின் சுஹேல்தேவ் தலைமையிலான பாரதிய சமாஜ் கட்சி, விகாஷீல் இன்சான் கட்சியின் முகேஷ் சாஹ்னி ஆகியோருடன் கொள்கை அடிப்படையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதனால் அக்கட்சிகளின் தலைவர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். மேலும் மற்றொரு செல்வாக்கு மிக்க தலித் தலைவரான ஜிதன் ராம் மஞ்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் சேர்ந்துள்ளதால், அவரும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளது.
அதேபோல் சிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி) தலைவர் சுக்பீர் சிங் பாதல், தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதால், அவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது’ என்று கூறினர். சமீபத்தில் நடந்த கர்நாடகா தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்த பாஜக, இந்தாண்டு கடைசியில் நடைபெறும் 5 மாநில தேர்தலிலும் பின்னடைவை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்தாண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலிலும் பாஜகவுக்கு சரிவே ஏற்படும் என்று கூறப்படுவதால், தனது தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உதிரி கட்சிகளை சேர்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. வரும் 18ம் தேதி நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் எந்ததெந்த கட்சிகள் பங்கேற்கும் என்பதும், கூட்டணியில் இருக்கும் எந்தெந்த கட்சிகள் புறக்கணிக்கும் என்பதும் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக உள்ளிட்ட கட்சிகளின் ஒருங்கிணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த தேர்தல்களில் போட்டியிட்டது. தற்போது அதிமுகவுக்கும், தமிழக பாஜகவுக்கும் மோதல் போக்கு இருந்து வருவதால், எதிர்வரும் லோக்சபா தேர்தலில் இக்கூட்டணி தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக மூத்த தலைவர்கள் சிலர், பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்றும் கூறிவருகின்றனர். காரணம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், அதிமுக மூத்த தலைவர்கள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பொதுவெளியில் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருவதால், வரும் 18ம் தேதி டெல்லியில் நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் அதிமுக பங்கேற்குமா? புறக்கணிக்குமா? என்பதும் ெபரும் கேள்வியாக உள்ளது.