புதுடெல்லி: கனடாவில் இந்திய தூதரை வெளியேற்றியதற்கு பதிலடியாக இந்தியாவில் இருக்கும் கனடா தூதரை 5 நாளில் நாட்டை விட்டு வெளியேறுமாறு வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. காலிஸ்தான் ஆதரவாளர் நிஜ்ஜர் கொலை வழக்கு சம்பந்தமாக, கனடாவில் பணியில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரி பவன் குமார் ராயை, அந்நாட்டைவிட்டு வெளியேற்றியதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்தார். அதன் எதிரொலியாக இந்தியாவில் பணியில் இருக்கும் கனடா நாட்டின் தூதகர அதிகாரி கேமரூன் மேக்கே என்பவர், கனடா – இந்தியா இடையிலான விவகாரம் குறித்து விளக்கம் அளிப்பதற்காக, டெல்லியின் சவுத் பிளாக்கில் அமைந்துள்ள வெளியுறவு அமைச்கத்திற்கு நேரில் வந்தார்.
சில நிமிடங்கள் அங்கிருந்த அவர், மீண்டும் தனது அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றார். இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்தியாவுக்கான கனடா தூதரை, அடுத்த 5 நாட்களில் நாட்டைவிட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. முன்னதாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர் நேரில் வந்து விளக்கமளித்த பின், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் கனடா தூதர்கள் தலையீடு இருந்ததாலும், அவர்கள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் செயல்பட்டு வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது’ என்று கூறின.
காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியா – கனடா அரசுகளுக்கு இடையே மோதல்கள் இருந்து வரும் நிலையில், தற்போது தூதர்களை நாட்டை விட்டு வெளியேற்றிய விவகாரம் இருநாடுகளுக்கு இடையிலான உறவில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிகாரி திடீர் கருத்து
அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் வெளியிட்ட பதிவில், ‘கனடா பிரதமர் ட்ரூடோவின் குற்றச்சாட்டை கேட்டு கவலையடைகிறோம். எங்களது தூதர்கள், கனடா அதிகாரிகளுடன் பேசி வருகின்றனர். உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது அவசியம்’ என்று கூறியுள்ளார்.