சென்னை: சென்னை போன்ற பெரு நகரில் கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து தங்குகின்றனர். இதனால், சென்னையில் வாடகை வீடுகளுக்கு எப்போதும் மவுசு உண்டு. இதனால், பலர் தங்களது பழைய வீடுகளை இடித்துவிட்டு, மாடி வீடுகளை கட்டி வாடகை விடுகின்றனர்.
இவ்வாறு பழைய கட்டிடங்களை இடித்து புதிதாக கட்டுபவர்கள் அந்த கட்டிட கழிவுகளை அகற்றுவது என்பது சவாலான ஒன்றாக இருந்து வருகிறது. பலர் ஆங்காங்கே உள்ள காலி இடங்கள் மற்றும் நீர் நிலைகளின் கரையோரங்களில் கொட்டி சென்று விடுகின்றனர். இது போன்ற விதிமீறல்கள் சென்னை மாநகராட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துவதாக இருந்தது.
இதனால் கட்டிட கழிவுகளை கண்ட இடங்களிலும் கொட்டுவதை தடுக்கும் வகையில், கட்டிட கழிவு குறித்த வழிகாட்டு நடைமுறைகளை சென்னை மாநகராட்சி அறிவித்தது. அதன்படி, பொது இடத்தில் கழிவை கொட்டினால், டன்னுக்கு ரூ.5,000 அபராதம். ஒரு டன்னுக்கு கீழ் உள்ள கட்டிட கழிவை மாநகராட்சி கட்டணமின்றி எடுத்துக் கொள்ளும். அதற்கு மேல், 20 டன் வரையிலான கழிவை, மண்டல அலவிலான மையங்களில், ஒப்படைக்கலாம்.
அதற்கு, ரூ.800 கட்டணம். மாநகராட்சி எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், டன்னுக்கு, ரூ.3,300 செலுத்த வேண்டும். இதில், 20 டன்னுக்கு மேல் என்றால், குப்பை கிடங்கில் சம்பந்தப்பட்ட நிறுவனமே ஒப்படைக்க வேண்டும். இதற்கு பராமரிப்பு கட்டணம் ரூ.800 செலுத்த வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என வழிகாட்டு விதிமுறைகளை அறிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு மண்டல அளவிலும் கட்டிட கழிவுகளை கொட்ட காலி இடங்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இவ்வாறு சேரும் கட்டிட கழிவுகள் மலை போல் தேங்கி வருகிறது. இதனால் கட்டிட கழிவுகளை முற்றிலுமாக அகற்றும் வகையில் மறுசுழற்சி முறையை சென்னை மாநகராட்சி கையில் எடுத்துள்ளது. அதாவது, தமிழகத்தில் முதன்முறையாகக் கட்டிட கழிவுகளில் இருந்து மறுசுழற்சி அடிப்படையில் மணல் உற்பத்தி செய்யும் நடைமுறையைச் சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக 2 பிளான்ட்களையும் சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்காக நாள் ஒன்றுக்கு 10,000 முதல் 15,000 லோடு மணல் தேவை இருக்கிறது. தமிழகம் முழுவதும் கணக்கிடும் போது சுமார் ஒரு கோடி யூனிட் மணல் தேவைப்படும் எனக் கூறப்படும் நிலையில், ஆற்று மணலை எடுக்கப் பல்வேறு சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டிருப்பதால் மணல் தட்டுப்பாடு இருந்து கொண்டே இருக்கிறது.
ஆற்று மணலுக்கு மாற்றாகத் தயாரிக்கப்பட்ட எம்சாண்ட் மணலும் போதுமான பயனளிக்காத நிலையில் அதற்கு மாற்று மணல் தயாரிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி முதற்கட்டமாக இறங்கியுள்ளது. அதன் அடிப்படையில், குடியிருப்புவாசிகள் தங்களின் கட்டுமானம் மற்றும் இடிபாடு கழிவுகளை அகற்றுவதற்கு 1913 என்ற உதவி எண் மூலமாகவும், மாநகராட்சியின் இணையதளம் மூலமாகப் பதிவு செய்து சேவையைப் பெறலாம் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
அவ்வாறு பெறப்படும் கழிவுகள் கொடுங்கையூர் அல்லது பெருங்குடி குப்பைக் கிடங்கிற்கு கொண்டு வரப்படுகிறது. இந்த கட்டிட கழிவுகளை மறுசுழற்சி செய்ய 2 புதிய பிளான்ட்களை அமைத்துள்ளது. பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிளான்ட்களில், ஒவ்வொன்றிலும் ஒரு நாளைக்கு ஆயிரம் டன் கட்டிட கழிவுகள் சேர்க்கப்படுகின்றன.
கடந்த 3 மாதங்களில் ஒரு லட்சம் டன் கட்டிட கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்திற்கு, சென்னை ஐஐடி அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஐஐடியின் தகுதி பரிசோதனையின் படி, இந்த மணல் பயன்பாட்டிற்கு பொருந்தும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் வாயிலாக, கட்டுமான பில்லர் மற்றும் பூச்சு வேலைகளுக்கு, மணல் டன்னுக்கு ரூ.900, ஜல்லி டன்னுக்கு ரூ.650 வரை விற்கப்படுகிறது. இதனால், பலர் கட்டிட கழிவுகளில் இருந்து மறுசுழற்சியின் மூலம் தயாரிக்கப்பட்ட மணலை வாங்கி செல்கின்றனர். சென்னை மாநகராட்சியின் இந்த மறுசுழற்சி முயற்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘கட்டிடக் கழிவுகளை மறுசுழற்சி செய்து உருவாக்கப்படும் இந்த மணல் ஆற்று மணலை விட விலை குறைவாகவும், தரமானதாகவும் உள்ளது. இந்த மணலுக்கான அங்கீகாரத்தை சென்னை ஐஐடி வழங்கியிருக்கும் நிலையில், விமான நிலையம், எல் அன்ட் டி உள்ளிட்ட பல்வேறு கட்டுமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கட்டுமானக் கழிவுகளைச் சாலையோரங்களிலும் நீர் நிலைகளிலும் கொட்டுவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதோடு, குறைந்த செலவில் தரமான மணல் கிடைக்கிறது. இந்த புதிய திட்டத்தின் மூலம் சென்னையில் இடிக்கப்படும் கட்டிட கழிவுகளை வேகமாக அகற்றுவதற்கு பெரும் உதவியாக உள்ளது. இந்த மணலை கட்டிட நிறுவனங்கள் வாங்கி செல்கின்றனர்,’’ என்றனர்.