மதுரை : கட்டுமானப் பொருட்களின் விலையை முறைப்படுத்தக் கோரிய வழக்கில், கனிம வளத்துறை முதன்மைச் செயலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கந்தசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கட்டுமான பணிகளுக்கான மூலப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இவற்றை முறைப்படுத்தக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
சுரங்க குவாரி பொருட்கள், எம்.சாண்ட், கிராவல், கல் உள்ளிட்ட அத்தியாவசிய கட்டுமான பொருட்களின் விலையை முறைப்படுத்துவதற்காக மாநில அளவிலான குழுவை அமைக்கவும், அரசு டெண்டர் ஏலம் எடுத்தவர்களுக்கு உதவும் வகையில் விலை உயர்வு குறித்து முன் கூட்டியே அறிவிப்பை வெளியிடுமாறும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி ஆகியோர், மனுவிற்கு கனிம வளத்துறை முதன்மைச் செயலர் மற்றும் கமிஷனர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.